பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கத் தமிழர் வாழ்வியல்

39



ஆயினும் அவன் நெறிமுறைகளுக்கு இசைந்த வாழ்வுடையவன். அவன் தலைவியைக் காதலித்தது, தான் இன்புறுதற்காகவல்ல. காதலியை இன்புறுத்தற்காகவேயாம். ஆதலால் மெய்யுறு புணர்ச்சி பெற இயலாமை அல்லது காலம் நீட்டித்தல் ஆகியன பற்றி அவன் கவலைப்படுவதில்லை. இதனை,

“பெறாஅன் பெயரினும் முனிய லுறான்
இளமையில் இகந்தன்றும் இலனே”

(குறிஞ்சிப்பாட்டு 243-244)

என்ற குறிஞ்சிப் பாட்டால் அறியலாம்.

பழங்காலத்தில் உள்ளப் புணர்ச்சியில் மட்டுமே கூடி மகிழ்ந்து மெய்யறு புணர்ச்சி வாய்க்காமலே இறந்த காதலர் களும் உண்டு. -

அதனால்தான் களவியலில் உள்ளப் புணர்ச்சி மட்டுமே உண்டு என்பதை விளக்க அகத்திணை நூலாகிய குறுந்தொகையில், பாடிய பாட்டாலேயே பெயர் பெற்ற “செம்புலப் பெயல் நீரார்” பாடும் அகப்புணர்ச்சியின் மாட்சிமையைக் கேளுங்கள்!

“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனிர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே”

(குறுந்-40)

தலைவன் தலைவியாக தம்முள் பண்பு நலம் ஒத்தவர்களிடையில் காதல் தோன்றுவது தவறன்று. அஃது அறம் என்பது சங்க காலத் தமிழர் வாழ்வியலில் நிலை பெற்றிருந்தது. காதலித்தவர்களை மணம் செய்து கொள்ள முடியாமல் தொல்லைப்படுத்தும் இக்காலச் சமுதாயத்தினரைப் போலன்றி சங்க காலத்தில் காதலுக்கு வரவேற்பு இருந்தது.