பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கத் தமிழர் வாழ்வியல்

43


 சிறுதுளைக் கொடுநுகம் நெறிபட நிரைத்த
பெருங்கயிற்று ஒழுகை மருங்கிற் காப்பச்
 சில்பத உணவின் கொள்ளை சாற்றிப்
பல்எருத்து உமணர் பதிபோகு நெடுநெறி”

(பெரும்பாண். 60 - 65)

என்று பெரும்பாணாற்றுப் படை பேசுவதால் அறியலாம்.

சங்கத்தமிழர் வாழ்வியலில் முறையான அரசு அமைந்திருந்தது போலவே, அறங்கூறவையமும் அமைந்திருந்தது. இன்று, நீதி மன்றங்கள் என்றும், முறை மன்றங்கள் என்றும் அழைக்கப் பெறுவனதாம் பழங்காலத்து அறங்கூறவையம். ஆனால், இந்த நீதி மன்றங்களின் நடைமுறைக்கும் அறங் கூறவையத்தின் நடைமுறைக்கும் நிறைய வேறுபாடுண்டு.

இத்தகைய சிறந்த அறங்கூறவையங்களைப் பண்டைத் தமிழரசர்கள் நிறுவி, முறை வழங்கினர். அறங்கூறவையத்தில் அறவோராக, நடுவராக அமர்வோர் வழக்கிடுவோரின் உள்ளத்தின் ஐயத்தையும் அச்சத்தையும் அவ்வழித்தோன்றும் வருத்தத்தையும், இம்மூன்றிற்கும் காரணமாக அமைந்த பற்றுள்ளத்தையும் நீக்கும் தகுதியுடையவராக அமர்ந்து இருந்தனர்.

அவ் அறவோர், ஒருபால் கோடுதல் இல்லை. அவர்கள் துலாக்கோல் போல் அமர்ந்து அறத்தினையே மையமாகக் கொண்டு எல்லாருக்கும் விளங்க, ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில், வழக்கில் வென்றோர் மகிழ்தல் மட்டுமின்றி வழக்கில் தோற்றோரும் தம்முடைய தோற்பும் நீதியின் பாற்பட்டதே என்று ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் முறை வழங்கும் மாண்புடையதாகச் சங்ககாலத் தமிழகத்தில் அறங்கூறவையம் இருந்தது. இதனை, மாங்குடி மருதனாரின் மதுரைக் காஞ்சி,