பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்கத் தமிழர் வாழ்வியல்

45


பாலது. சங்ககாலத் தமிழர் இறைவனை வழிபட்டனர். தாம் விரும்பியவற்றை அருளிச் செய்யுமாறு இரந்து வேண்டினர். எவற்றை வழங்குமாறு வேண்டினர்? பொருளினையா? பொன்னினையா? போகத்தினையா? இல்லை! இல்லை! ஏன்? இவை சங்ககாலத் தமிழர்க்கு வேண்டாதனவா? இவை வேண்டாத மானிடசாதி என்றும் இருந்ததில்லை. இனிமேலும் இருக்கப் போவதில்லை.

பின் ஏன் இவற்றை வேண்டவில்லை. இவை மூன்றும் மானிடர் தமது அறிவால், அறிவறிந்த ஆள்வினையால் படைத்துத் துய்க்க வேண்டியவை. தம் ஆற்றலுக்கு இசைந்தவற்றைத் தாம் ஆற்றாது இறைவனை வேண்டுதல் பிழை-குற்றம் என்ற நிலை, சங்க காலத் தமிழர் வாழ்வியலில் இருந்தது. அன்பினை இரந்து கேட்டனர்; அறத்தினை அருளுமாறு வேண்டினர்.

“...யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல; நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்
உருள் இணர்க் கடம்பின் ஒலிதாரோயே!"

(பரிபாடல் 5 : 78-81)

என்னும் பரிபாடல் இதற்குச் சான்றாகும்.

சங்ககாலத் தமிழர் வாழ்வியல் நனி நாகரிகத்தில் சிறந்தது. எது நாகரிகம்? உடைகளின் எடுப்பா? முடிகளின் காடா? செந்நெற் கழனியில் சற்றும் தாழாது தலைநிமிர்ந்து ஆடும் பதர் நிறைந்த பயிரின் பகட்டா? சிறுசிறு செயல்களில் கொல் குறும்புகளில் பலர் கவனத்தை ஈர்ப்பதா? இவை இன்று கல்லா இளைஞரால் நாகரிகம் என்று கருதப் பெறும் பொய்ம்மைகளாகும்.