பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இனிய காண்க!

49


நான்முகனின் முறை பிறழ்ந்த படைப்பைப் பார்த்தாலே அவன் பண்பில்லாதவன் என்று தெரிகிறது என்று, நான்முகனை இடித்துக் கூறிய சான்றோனும் உண்டு. அது மட்டுமா? அந்தப் பண்பிலாளனாகிய நான்முகன் படைப்பு இன்னாதது. ஏ மனிதனே! நான்முகன் படைத்த படைப்பை மாற்று! அதுவே தலைவிதி என்று நம்பாதே! அதை அழித்து எழுது! இனியன காண முயற்சி செய்! என்று பழங்காலத் தமிழ்ப் புலவன் “பக்குடுக்கை நன்கணியார்” எழுச்சியுடன் மனித உலகத்தை இன்னாதன அழித்து இனியன காண்க! என்று ஆணையிடுகின்றான்! ஆற்றுப் படுத்துகின்றான்.

ஒரு வீட்டில் நெய்தற்பறை கேட்கிறது. நெய்தற் பறை இறந்த வீட்டில் கொட்டுவது. மரணம் அல்லது இறப்பு இயற்கையானது; தவிர்க்க முடியாதது என்ற நம்பிக்கையே மக்கட் சமுதாயத்தில் காலூன்றி நிற்கிறது.

திருவள்ளுவரும் கூட நேற்றிருந்தவர் இன்றில்லை என்ற பெருமை உலகிற்கு உண்டு என்ற கருத்தில் 'நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை பிறங்கிற்று உலகு' என்றார். இளங்கோவடிகளும் 'வையகத்தில் வரையறுத்த வாழ்நாள் யாரறிவார்?’ என்றார். நற்றமிழ்த் திருஞானசம்பந்தரும் ‘சா நாளும் வாழ்நாளும் யாரறிவார் நன்நெஞ்சே! என்றார்.

சீத்தலைச் சாத்தனாரும் “பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்” என்றார். ஆனால் பக்குடுக்கையார் நெய்தற் பறை ஓசையைக் கேட்டு நெஞ்சு குமுறுகின்றார். ஏன் மரணம்? மரணத்தை எதிர்த்து மாற்ற முடியாதா? மாற்ற முடியும்! மாற்ற வேண்டும். ஒருவர் வீட்டில் சாப்பறையும் பிறிதொரு வீட்டில் மணப்பறையும் என்பது இயற்கைக்குமாறு என்பதே கவிஞனின் கருத்து. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு மரணத்தை வெல்ல வேண்டும் என்று கூறியும் இன்னமும் மனித உலகம் செத்துக் கொண்டிருக்கிறது. ஒரு மனையில் நெய்தற்பறையும், பிறிதொரு மனையில் மணப் பறையும்