பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தோற்றுவித்துக் கண்ணியத்தை மறைத்திருக்கிறது. எங்கும் சிறை மயம். கணியன் பூங்குன்றன் காட்டுகின்ற வாழ்க்கை முறையினை மேற்கொண்டால் இந்த அவல நிலைமை மாறும். அம்மம்மா! எத்தனை பேருக்கு ஊர்ப் பாசம். ஊருக்காக - ஊரின் முன்னேற்றத்திற்காக சுண்டு விரலை அசைக்காதவர்கள்கூட எங்கள் ஊர் என்று வீறாப்புப் பேசுகிறார்கள். அரசுப் பணி மனையில் அலுவல் செய்கிறவர்களிடத்தில் ஊர்ப்பற்று எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதை உத்தியோக மாறுதல்கள் வரும்பொழுது கண்கூடாகக் காணலாம். கணியன் பூங்குன்றனார் “யாது மூரே!” என்று வாழ வேண்டுமென்கிறார். யாது மூரே! என்ற பெருநெறி பிடித்து ஒழுகின் பகை ஒடுங்கும்; போர் ஒழியும்.

யாதும் ஊரே! என்று கொண்டால் மட்டும் போதாது. பலர் பல நாடுகளில் குடியேறி வாழ்கின்றனர். யாதும் ஊரே! என்னும் அடிப்படையில் அல்ல. வாழ்க்கையின் நிர்ப்பந்தங்களே அடிப்படை பல ஊர்களில் குடியேறி வாழ்பவர்கள் பலர் அந்த ஊரில் யாரோடும் உறவு கொள்ளாது தனித்தே வாழ்வர். அதனால், அது பிழைப்புக் கருதிய குடியேற்றமே தவிர, உறவு, பண்பாடு அடிப்படையில் தோன்றிய குடியேற்றமல்ல. மனித குலத்தைச் சார்ந்தவர்கள் அனைவரையும் இனம், மொழி, சமயம், சாதி, அரசியல் வேறுபாடின்றி நேசிக்க வேண்டும். அன்பு கலந்து ஒன்றாகப் பழக வேண்டும். இன்றைய மனித வாழ்க்கை அசுரத் தன்மையுடையதாக உருவம் பெற்றிருக்கிறது. இன்று பலர் பழகுவதும் கூடப் பண்பாட்டிற்காக அல்ல. காரிய மயக்கு. வாழ்க்கையே வணிக மயமாகிவிட்டது. கணியன் பூங்குன்றன் காட்டும் பாதை ‘யாவரும் கேளிர்!’ என்பதாகும். மனித குலம் தமக்குள் காட்டிக்கொள்ளும் அன்பு வெள்ளத்தில், அரசியல் ஆணவ ஆதிக்கக்காரர்கள், வேறுபாட்டைப் பெரிதுபடுத்திய மத போதகர்கள் கட்டியுள்ள பிரிவினைக் கோட்டைகள் இடித்துத்தள்ளப் பெற வேண்டும். அன்றே உண்மையான மனித குலம் தோன்றும்.