பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யாதும் ஊரே! யாவரும் கேளிர்

59


பிறர் தர வாரா” மனித வாழ்க்கைச் செல்வம் வழி அவரவர் ஊழின் வழியேயாம்.

ஊழ் என்பது என்ன? பலர் கருதுவது போல அது கடவுளின் ஆணையா? எல்லோருக்கும் நடுவாக, நீதியாக, பொதுவில் நிற்கும் பரம்பொருள் ஒருவர்க்கு நன்மையும் பிறிதொருவர்க்குத் தீமையும், ஒருவர்க்குச் செல்வத்தையும் பிறிதொருவர்க்கு வறுமையையும், ஒருவர்க்குத் தளராத தளபதி பதவியையும் பிறிதொருவர்க்கு தளர்ந்து சாரும் கோழைத்தனத்தையும் கொடுப்பானா என்ன? அப்படி அவன் கோடுப்பானானால், அவனுடைய நடுநிலைத் தன்மை என்னாவது? பொதுமை இயல்பு என்னாவது: கடவுளுக்கும் ஊழுக்கும் நேரிடையாகச் சம்பந்தமில்லை. ஊழ் என்பது அவரவர் சிந்தனையும் செயலுமேயாகும். நேற்றையத் தீய சிந்தனை-நேற்றையத் தீய செயல் இன்றையத் தீயூழாக உருப்பெற்று அவற்றை உடையாரை வழி நடத்துகிறது அல்லது இழுத்துச் செல்கிறது. அதுவே தீயூழ்.

அதுபோலவே நேற்றைய நற்சிந்தனை, நேற்றைய நற்செயல் இன்றைக்கு நல்லூழாக உருக் கொள்கிறது. அவற்றை உடையாரை அது வழி நடத்துகிறது அல்லது இழுத்துச் செல்கிறது. ஆக, ஊழ் நல்ல வண்ணம் அமைய வேண்டுமானால் ஊழ் தோன்றுதற்குரிய அடிப்படைப் புலனாகிய சிந்தனையைத் திருத்துக அவ்வழி நல்லுணர்வை நாடி வளர்த்துக் கொள்க. நல்லனவே எண்ணி, நல்லனவே செய்திடுக. நல்லூழ் தோன்றும். நன்றுடையானும் நாடித் துணை நிற்பன்.

பெரியோரை வியத்தல் கூடாது. அது எப்படி? பெரியோரை மதித்தல் என்பது வேறு. பாராட்டுதல் என்பது வேறு. போற்றுதல் என்பது வேறு. இவை வியத்தல் ஆகா. வியத்தல் என்பது இயல்பில்லாத ஒன்றைக் கண்டபொழுது காணப்பெறும் ஆச்சரியம். அதற்கே வியப்பு என்று பெயர்.