பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிசிராந்தையார் பெருவாழ்வு

63



பிசிராந்தையார் காலத்தை வென்று நிற்கும் கருத்து அமுதத்தினைத் தந்தவர். வானவர் அமிழ்தம் மரணமிலா வாழ்வளிக்கும் மருந்தென்பர் புராணிகர். அஃது உண்மையோ, பொய்யோ நாமறியோம். ஆனால் பைந்தமிழ்ப் புலவர் பிசிராந்தையார் நரையின்றி, மூப்பின்றி வாழத் தந்துள்ள கருத்து அமிழ்தம் அணையது. காலத்தை வென்று வாழும் வகை காட்டுவது.

பிசிராந்தையார் உயிரை ஓம்பி வாழ்ந்தவர். அதனால் அவர் வாழ்க்கை நட்பிற் பொருந்தியிருந்தது. நட்பிற்கு உறுப்பாகிய கெழுதகைமை தழைத்திருந்தது. ஆரா அன்பினில் அவர் உயிர் தோய்ந்திருந்ததால், அவருடலில் ஓடிய செங்குருதித் துளிகளெல்லாம் அன்பின் மயமாகவே உருமாறியிருந்தன. நிறைந்த அன்புடையோர் என்றும் இளையராயிருப்பர். அவர்களை முதுமை தீண்டாது. நரையும் திரையும் நாடி வந்து பற்றா. பிசிராந்தையார் ஆண்டு பலவாகியும் இளமை குன்றாதிருந்தார்.

நரையின்றி வாழ்ந்த பிசிராந்தையாரைக் கண்டு வியப்புற்றோர் புலவரை வினாவுகின்றனர். ஆம்! முதுமையின் அடையாளமாகிய நரையை விரும்பி ஏற்போர் யார்? நரைத்த வெண்மயிரைக் கருமைச் சாயம் பூசி ஒப்பனை காட்டி உலகில் திரிவோர் எத்தனை பேர்? செய்தித் தாள்களைப் புரட்டினால் “நரையா? கவலைப்படாதீர்கள்!” என்ற விளம்பரங்களைப் படிக்கின்றோம். கேட்கின்ற உங்களில் பலருக்கும் கூட நரையின்றி வாழ விருப்பம்தானே! இதோ நரையின்றி வாழப் பிசிராந்தையார் வழி கூறுகிறார் கேளுங்கள்!

காதல் வாழ்க்கை அன்பின் வழிப்பட்டது. காதல் வாழ்க்கை இன்பந் தருவது. ஆனால் பலர் நினைப்பது போல எளிதன்று. ஒருவன் ஒருத்திக்கு உண்மையான கணவனாக அமைவதும், ஒருத்தி ஒருவனுக்கு உண்மையான