பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மனைவியாக அமைவதும் அருமையிலும் அருமை. கணவனாக திறைவேற்றும் வாழ்க்கையிலும், மனைவியாக நிறைவேற்றும் வாழ்க்கையிலும் ஏராளமான உடற் கடமைகள்-உயிர்க் கடமைகள் அமைந்துள்ளன. அந்தக் கடமைகள் அனைத்தையும் இனிதே நிறைவேற்றுவதற்கு நிறைந்த குணங்கள் வேண்டும். நல்ல மனைவியைப் பெறாத கணவன், வாழ்க்கையில் இன்பத்தையும் பெறுதல் இயலாது. அமைதியையும் பெறுதல் இயலாது.

அதனாலன்றோ, பிற்காலக் கவிஞர் “சற்றேனும் ஏறுக்கு மாறாயிருப்பாளே யாமாகிற் கூறாமல் சந்நியாசம் கொள்” என்று பாடினார். திருவள்ளுவரும் வாழ்க்கைக்கு வாய்க்கும், மனைவி நலம் செய்பவளாக இருக்க வேண்டும் என்ற குறிப்பில், வாழ்க்கைத் துணை நலம் என்றே ஓர் அதிகாரம் அமைத்தார். வாழ்க்கைத் துணை நலம்! அவர், மனைவிக்குத் தந்த பெயர் வாழ்க்கைத் துணை! அவள்மூலம் பெறுவது நலம்!

 “தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்”

என்றது. வள்ளுவம். ஒரு சிறந்த மனைவி தன்னை, தன்னுடைய உடலை, உயிரை, உயிரினும் சிறந்த கற்பு நலத்தைத் தானே பாதுகாத்துக் கொள்கிறாள். ஆம்! ஒரு மனைவி தன்னைக் காப்பாற்றிக் கொண்டாலே தற்கொண்டானைப் பேண முடியும். தற்கொண்டானைப் பேணுதல் வள்ளுவர் கூறும் நுட்பமான வழக்கு. “தன்னைக் கொண்ட கணவனை, உணவு முதலியவற்றால் பேணுதல்” என்று பரிமேலழகர் கூறினாரேனும், அதுவே வள்ளுவத்தின் நிறைவான கருத்தன்று. கணவனின் உடல் நலத்தைப் பேணுதல் மனைவியின் சாதாரணக் கடமைகளில் ஒன்று. அதனினும் சிறந்த கடமை உயிர் நலம் காத்தல். கணவனின் கற்பு நலம் காத்தல்.