பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிலவுலகம் நிலைத்தற்கு அடிப்படை

71


நிலையாக அமையவில்லை; வீழ்ந்துபட்டன. வரலாற்றுப் புத்தகத்தில் சில பக்கங்களை அடைத்துக் கொண்ட பெருமைதான் வல்லரசுகளுக்கு உண்டு. இந்த நிலவுலகத்தை எடுத்துக் கவிழ்த்து விடுவதைப் போன்று நிகழ்ந்த கொடிய போர்கள் எத்தனை? எத்தனை? நிலவுலகத்தின் அணியென விளங்கும் ஆறுகளைச் செந்நீரால் கலக்கிய போர்கள் நிகழ்ந்ததுண்டு. ஆனாலும் நிலவுலகம் தனது நிலையான இயல்பை இழந்துவிடவில்லை. அழிந்துவிடவும் இல்லை. ஆறுகளோடு போட்டி போட்ட செங்குருதி ஆறுகள் சில நாட்களே ஓடின. ஆனால் வளமூட்டும் பேராறுகள் ஓடிக் கொண்டேயிருக்கின்றன.

ஆக அரசுகளால் நிலவுலகம் வாழவில்லை. காவியங்களால்தான் நிலவுலகம் வாழ்கிறதா? இல்லை! இல்லை!! கடவுளால்தான் நிலவுலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறதா? இல்லை. இல்லை! கடவுள் தன்மையால் உலகம் வாழ்ந்தது; வாழ்ந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் வாழும், கடவுள் தன்மை! அப்படியென்றால் என்ன? சமயக் கோலங்களா? பக்தி உணர்ச்சியா? இல்லை. இல்லை! இவை கடவுள் தன்மையைப் பெறும் சாதனங்களே தவிர இவையே கடவுள் தன்மை ஆகா, அங்ஙனமாயின் கடவுள் தன்மை என்பதுதான் என்ன?

உயிர்க்குலம் கூடி உண்டு மகிழ்ந்து வாழவேண்டும். கூட்டு வாழ்க்கை கோபுரம் போல உயர்வைத் தரும். தனிமை வாழ்க்கை அசுர வாழ்க்கை, அருளியலுக்கு முற்றும் புறம்பானது. அதனாலன்றோ “பகுத்து உண்க” என்று வள்ளுவம் ஆணையிட்டது. தாயுமானாரும் “காகம் உறவு கலந்துண்ணக் கண்டீர்” என்றார். பிறர் பசிக்க ஒருவர் உண்ணும் வாழ்க்கை நாகரிகமற்ற வாழ்க்கை; இத்தகைய தீய பழக்கம் உடையவரிடம் அன்பு மலராது. அறநெறியும் கால் கொள்ளாது. அருளியலும் சாராது; இத்தகையோர் கோடி அருச்சனை செய்தாலும் அவர்களுக்கும் கடவுளுக்கும்