பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மறந்தும் தம்மைப் பழி தீண்டாதவாறு தம்மைப் பாதுகாத்துக் கொள்வர்.

உலகமே அவர்களுக்குக் கிடைப்பதாக இருந்தாலும் கடவுள் தன்மையுடைய புகழை விரும்பாமல் பழியை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளார்கள். பழியுடன் வரும் எதனையும் ஏற்கார். இதுவே கடவுள் தன்மை!

உண்மையான புகழ் அயர்வினை அகற்றும்; ஆள் வினையைத் தரும். உலகியலை ஓயாது தொழிற்படுத்த உறுதுணை செய்யும். வாழும் உலகிற்கு அயர்வு முதற்பகை. அயர்ச்சி அறிவைக் கெடுக்கும்; ஆர்வத்தைச் சிதைக்கும்; உழைப்புத் திறனை உருக்குலையச் செய்யும். ஒழுக்கத்தைக் கெடுக்கும். மயக்கத்தைத் தரும் முடிவாக இம்மையில் கொடுந் துன்பத்தையும், மறுமையில் நரகத்தினையும் தரும்.

அயர்வினைச் சார்ந்தோரை ஆயிரம் கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது. அறிவறிந்த ஆள்வினை யுடையார் அயர்ச்சி உறுதலிலார். அவர்களைத் தோல்வி களோ, துன்பங்களோ, இகழ்ச்சியோ, அயர்வினை அடைந்திடும்படி செய்ய முடியாது. பெற்ற தோல்விகளைப் படிப்பினையாக்கி, வெற்றிப் படியாக்கி ஓயாது பயணம் செய்வர். இங்ஙனம் வாழ்பவர்தாம், உண்மையான கடவுளின் பக்தர்கள். நில உலகத்தின் இயக்கத்திற்கு உயிர்ப்பாக விளங்குபவர்கள்: இதுவே, அயர்விலா வாழ்க்கையின் கடவுள் தன்மையின் சாரம். அதனாலன்றோ “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற சிறந்த கோட்பாடு தோன்றலாயிற்று. அயர்விலா வாழ்க்கை அறனைத் தழுவிய அருளியல் வாழ்க்கை! அதுவே கடவுள் தன்மை!

தனியே உண்ணாதவராக, வெறுப்பிலராக, சோர்விலராக பிறர் அஞ்சுவது அஞ்சுபவராக உயிரைக் கொடுத்தும் புகழ் வேட்பவராக, பழியைச் சுமக்காதவராக அயர்விலாதவராக விளங்கி வாழ்தலே, வாழ்வாங்கு வாழ்தல். இத்தகு இனிய சிறந்த பண்புகள் இருப்பினும் போதாது.