பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிலவுலகம் நிலைத்தற்கு அடிப்படை

77


அவர்கள் ஓயாது முழு முயற்சியில் ஈடுபடவேண்டும். முயற்சி யென்பது வான்மழையை நிகர்த்தது. முயற்சி உடையாரையே முன்னவன் வாழ்விக்கின்றான். முயற்சியுடைய வாழ்க்கை ஒரு தவம். அதுவும் தனக்கென முயலாது பிறருக்கென முயலும் பண்பு சாலச் சிறந்தது.

இன்றைய மனிதனோ தனக்கெனவே முயல்கின்றான். தனக்கு ஆதாயம் இல்லாததை அவன் செய்ய விரும்புவதில்லை. அதனாலேயே உலகத்தில் துன்பம் வளர்ந்து வருகின்றது. தனக்கென வாழாது பிறருக்கென முயலுதலே உயரிய கடவுள் தன்மை! “குறியொன்றும் இல்லாத கூத்து” என்று இறைவன் ஞானக் கூத்தைக் குறிப்பிடுவர். வாழ்வித்து வாழ்தலும், மகிழ்வித்து மகிழ்தலுமே தவம். இத்தகைய சிறந்த தவம் செய்வோர் சிலராவது உலகில் தொடர்ந்து வாழ்ந்து வருவதால்தான் இந்த உலகம் இருந்தது; இருந்து கொண்டிருக்கிறது. இனிமேலும் இருக்கும்.

நிலையான உலகியல் இன்பமுற அமைந்து விளங்க நாம் அனைவரும் இந்த இயல்புகளைப் பெற்று உலகியலுக்கு ஒயாது இயக்கத்தைத் தருவோமாக! வையகத்தை வாழ்வித்து வாழ்வோமாக!

உண்டாலம்ம இவ் வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே! முனிவிலர்
துஞ்சலு மிலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்விலர்
அன்ன மாட்சி அனைய ராகித்
தமக்கென முயலா, நோன்றாட்
பிறர்க்கென முயலுதர் உண்மை யானே!

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று.

குறள்