பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


எழுத்துக்களே! என் செய்வது? புறநானூறு காட்டும் பொதுநெறி பரவினால் இந்த அவலம் அகலும்.

கோவூர்க்கிழார், கிள்ளிவளவனைப் பாராட்டுகின்றார். கிள்ளிவளவன் சோழப் பேரரசன் வெற்றிவாகை சூடியவன்; களத்தில் பகைவரைச் சந்தித்தவன். ஆயினும் அவனுடைய ஆண்மை, பகைவராலும் புகழ்ந்து கூறப்பெற்றது. ஒருவழிப்பட்ட பொருட்கள் உரைகல்லாக முடியாது. மாறுபட்ட பொருள்களே உரைகல்லாக முடியும். அதுபோல் கிள்ளிவளவன் புகழைக் கோவூர்க்கிழார் புகழ்ந்ததைவிட கிள்ளிவளவனுடைய பகைவர்கள் புகழ்ந்திருக்கிறார்கள், கிள்ளிவளவன் ஆண்மையும் நிறைநல் ஆண்மை. அவன்றன் பகைவரும் பாடறிந்து ஒழுகும் பண்பினர். இதனைக் கோவூர்க்கிழார் “பகைவர் புகழ்ந்த ஆண்மை” என்று பாராட்டுகின்றார். இன்று நாட்டிடை வாழும் கயமை வீழ்க! நற்பகை வளர்க! பகைவர் புகழும் ஆண்மை வளர்க!

நின்னோர் அன்னோர் பிறரிவன் இன்மையின்
மன்னெயில் முகவைக்கு வந்திசின் பெரும
பகைவர் புகழ்ந்த ஆண்மை நகைவர்க்குத்
தாவின்றி உதவும் பண்பின் பேயொடு
கணநரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து
செஞ்செவி எருவை குழீஇ
அஞ்சுவரு கிடக்கைய களங்கிழ வோயே.

- புறம் 373