பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 5.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இனிய நெறி

85


வறுமைக்குத் தான் நாணி, அந்த வறுமையை மாற்ற முயல்வது தகுதியுடைய தலைமைக்கு இலக்கணம். இதனை இளவெயினி, பிறர் கையறவு தான் நாணுதலும் என்று கூறுகின்றார். உயர்ந்த சமூக வாழ்க்கையில், மற்றவர் ஏழையாக இருப்பது ஏழையாக இருப்பவர்க்குக் கேவலமில்லை. அவர்களை ஏழைகளாக வைத்துப் பார்த்துக் கொண்டு வாழுகிறவர்களுக்குத்தான் கேவலம். மனிதன் வாழப் பிறந்தவன் மட்டுமல்ல. மனிதன் வாழுதல், உடலைச் சார்ந்த நிழல் போன்றது. அவன் வாழ்விக்கவே பிறந்தான், அவனுடைய வாழ்விக்கும் கடமை, உடலனையது. இன்று நம்மில் பலர் உடலை மறந்து விட்டு நிழலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஆதலால், வாழ்வாங்கு வாழ்பவரைக் காண முடியவில்லை. தகுதியுடைய தலைமையையும் காண முடியவில்லை. குறமகள் இளவெயினி கூறிய இனிய நெறி, வையகத்தின் வாழ்க்கை நெறியாக வேண்டும். அன்றே தலைமைப் பண்பு சிறக்கும். தரணி வாழும்.

நமக்குச் சிறந்தார் நம்முடன் பழகுபவர். பிழை செய்யின் பொறுத்தாற்றும் பண்பைப் பெற்றிடுவோமாக. நம்மைச் சுற்றிலும் வாழ்வோரின் வறுமையை எண்ணி நாணி நாளும் உழைத்து வறுமையற்ற வளமான சமுதாயம் அமைக்க உழைத்திடுவோமாக.

“தமர்தற் றப்பி னதுநோன் றல்லும்
பிறர்கை யறவு தான்நா தகுமே
...............தகுமே.”

- புறம் 157