பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மனிதனின் உணவைப் பறித்துத் தின்று கொழுத்து வளராத செல்வந்தன் இருத்தல் அரிது. பாரதி சமூக விஞ்ஞானக் கவிஞன், ஏன் ஒரு மனிதனின் உணவைப் பிறிதொரு மனிதன் பறித்து உண்ணவேண்டும்? இது அநீதி என்று கண்டிக்கின்றான். ஒரு மனிதன் நோவதை இன்னொரு மனிதன் பார்த்தும், அந்த நோவை மாற்றாது மகிழ்ந்து வாழ்கிற கேவலமான வாழ்க்கை இனியும் வேண்டுமா? அந்நிய ஆட்சியில்தான் நடந்தது; விவேகமில்லாத காலத்தில் நடந்தது. இனிமேலும் இந்தக் கேவலம் தொடர வேண்டுமா? என்று கேட்கிறான். அறிவு இல்லாத-அறிவின் பயன் இல்லாத-காட்டுமிராண்டித்தனமான வாழ்க்கை இனியும் வேண்டுமா? கூடவே கூடாது. உடனே தவிர்த்திடுக. இது பாரதியின் ஆணை.

இந்திய நாடு வளம் குன்றிய நாடு அல்ல. வளம் பல கொழிக்கும் நாடு. நான்கு நில அமைப்பும் பெற்று விளங்கும் திருநாடு. குறிஞ்சி நிலவளம்-வானுயர் தோற்றமுள்ள மலைகள்; மலைவீழ் அருவிகள்; மலைகளை மூடி மறைக்கும் காடுகள்! முல்லை நிலவளம்-இனி பொழில்கள் செழித்த மருத நிலவளம் - பாரதத்தைப் பசுமைத்தோல் போர்த்த போர்வை எனத்தகும் நெடிய வயல்வளங்கள். நெய்தல் நிலவளம்-அலை கடல்கள் கடல்படுமுத்துக்கள். இயற்கையில் கனிகளும், கிழங்குகளும் கணக்கின்றித் தரும் நாடு. இவ்வளவு வளமிக்க நாட்டில் வறுமை ஏது? எப்படி வந்தது? மனிதனின் வஞ்சனையினாலேயே வந்தது. வஞ்சனை உலகம் வறுமையை வறியவன் தலையில் "தலைவிதி" என்று எழுதியது. பாரதிக்குத் தாங்கொணாத கோபம். அந்தத் தலை விதியை அழித்து எழுதத் துடிக்கின்றான். புதுவிதி இயற்றுகின்றான். பாரதிக்குக் கோபம் உணவில்லாது வறுமையில் வாழ்கின்றவன் மீதல்ல. வறுமையாளனைப் படைத்த சமுதாயத்தின் மீதுதான். அந்தச் சமுதாய அமைப்பைத்தான் சாடுகின்றான். ஆம், ஒரு சராசரி தனி மனிதனுக்கும்