பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

89


வாழ்க்கை உத்தரவாதம் அளிக்கும் சமுதாயமே சமுதாயம். அங்ஙனம் இல்லாத சமுதாயம் குறையுடையது. அந்தச் சமுதாயத்தை அழித்து விடலாம் என்கிறான். அதற்கென ஒரு புதுவிதி இயற்றித் தருகின்றான்.

"இனி யொரு விதி செய்வோம்-அதை
எந்தநாளும் காப்போம்:
தனியொரு வனுக் குணவிலை
யெனில் ஜகத்தினை அழித்திடுவோம்."

என்பது பாரதியின் பாட்டு,

பாரதி உருவாக்க விரும்பிய புது விதி நாடு விடுதலை பெற்று முப்பது நான்கு ஆண்டுகள் ஆகியும் உருவாகவில்லை. இது இரங்கத்தக்கது. பாரதியின் நூற்றாண்டு நினைவாக இந்த விதி ஏற்கப் பெற்று வாழ்க்கை உத்தரவாதம் வழங்கினால் நாட்டுக்கு நல்லது. மனித சமுதாயத்தில் ஏது தனி மனிதன்! எல்லா உயிர்களிலும்-உயிர்க்குயிராக உறைபவன் ஒரே கடவுள். ஆதலால் வேற்றுமை இல்லை. எல்லாரும் அமர நிலை எய்த முடியும். எல்லாரும் அமரநிலை எய்தக் கூடிய மெய்ஞ்ஞானக் கலையை இந்தியா உலகிற்கு அளிக்கும். இந்திய மக்கள் அனைவரும் ஒரு குலத்தினர்; ஓரினத்தவர்; இந்திய மக்கள் அனைவரும் ஒரே நிலையினர்; உரிமைகள் பொது, கடமைகள் பொது. இந்திய சமுதாயத்தில் ஏழை இல்லை, பணக்காரன் இல்லை. எல்லாரும் ஒரே விலையினர்; இந்த நாட்டு மக்கள் அனைவரும் மன்னவர்கள். இது பாரதியின் முழக்கம்.

பாரதியின் உயர்ந்த எண்ணங்கள் செயல்களாக மலரவில்லை. இந்தியாவில் வறுமையின் கொடுமை வளர்ந்து வருகிறது. உழைக்கும் சக்தி விலைப் பொருளாக்கப்பெற்று இலாப வேட்டைக்காரர்களால் சுரண்டப்படுகிறது. எங்கும் சாதிச் சண்டைகள்; "மண்ணின் மைந்தர்கள்” என்ற கொள்கை இன்று பாரதம் பாரதியின் அடிச்சுவட்டில்