பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

91


நாடு. இன்றும் இந்தக் குறிக்கோளைத் தொடர்ந்து வற்புறுத்தி வரும் நாடு இதுவே.

உயிர்கள் ஒன்றல்ல. பலப்பல. உயிர்களிடையில் வேறுபாடுகள் இல்லை. எல்லா உயிர்களும் பிறப்பில் ஒத்தவை. பிறந்த எல்லா உயிர்களும் வாழமுடியும்; வாழ்வாங்கு வாழமுடியும். எல்லா உயிர்களும் இன்ப அன்பு நிலையை எய்த முடியும். இங்ஙனம் உலகத்திற்குச் சொல்லுகின்ற ஒரே சமயம் இந்திய நாட்டுச் சமயம்தான். உலகிற் பிறந்த எந்த மனிதரையும் "அஞ்ஞானி’ என்றும் யாரை நோக்கியும் "உனக்கு நரகம்"தான் என்றும் இந்திய சமயம் கூறாது. அப்படிக் கூறுவதை ஓர் உயர்ந்த சமயம் என்றும் ஏற்றுக் கொள்ள இயலாது. இந்திய சமயம், கட்டுக்கோப்பான வலிமை பொருந்திய சமய அமைப்பை அமைக்காததற்கும்,நெகிழ்ந்து கொடுக்கக் கூடிய வாழ்க்கை முறைகளைக் கொண்டதற்கும், சமயத்தை, பிரச்சாரத்திற்குரியதல்லாமல், வாழ்க்கை முறையாக ஏற்றுக் கொண்டதற்கும், மதமாற்றம் முதலியவற்றிற்கு முயற்சிக்காமல் இருந்ததற்கும் இந்திய சமயத்தின் பரந்த கொள்கையே காரணம்.

இந்திய சமயம் பிணக்குகளைக் கடந்தது; வேற்றுமைகளைக் கடந்தது. எந்தச் சூழ்நிலையிலும் உயிர் உய்திப் பெற முடியும் என்ற நம்பிக்கையுடையது. இந்திய சமயம் மக்களை இரும்புப் பிடியாகப் பிடித்து அலைக்கழிப்பதில்லை. இந்திய சமய வழிப்பட்ட புரோகிதர்கள், மதத் தலைவர்கள் ஆகியோருக்கும் சமுதாயத்தின்மீது இரும்புப் பிடியான ஆதிக்கப் பிடிப்பில்லை. அவரவர் விருப்பத்தைப் பொறுத்ததே அவரவர் மேற்கொள்ளும் சமயம், ஒழுகலாறு. இஃது இந்திய சமயத்தின் சிறந்த கொள்கை, கோட்பாடு, உலகியலில் எந்தப் பெயர் சொல்லி எப்படிக் கடவுளைத் தொழுதாலும் அது ஏற்றுக்கொள்ளக்கூடியவொன்றே. இத்தகைய பரந்த, நெகிழ்ந்து கொடுக்கக் கூடிய சமயத்தைத் தான் இந்திய சமயம் என்கிறோம். இது காலப்போக்கில்