பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


"இந்து சமய"மாயிற்று. இந்திய சமயம் இந்து சமயமான போது வேண்டாத சில பழக்கங்களை உரிமையாகக் கொண்டது. பரந்த மனப்பான்மைக்கு இழுக்குத் தரக்கூடிய சில குறுகிய பழக்கங்களையும் வழக்கங்களையும்கூட அனைத்துக் கொண்டது. உயர்ந்த இந்திய சமயத்தில் ஆழ்ந்து திளைத்த கவிஞன் பாரதி.

உயிர்கள் வேறுபாடுடையன அல்ல. எவ்வுயிரும் இறைவன் சந்நிதியே என்பது இந்து சமயத்தின் அடிப்படைக் கொள்கை உயிர்க்கு உயிராக இறைவன் இருந்து இயக்கி எல்லா உயிர்களையும் வழி நடத்துகின்றான். நோயுற்ற உயிராயின் மருத்துவ முறையில் வழி நடத்தி, நோய் நீக்கி, நல்லுயிராக்கி, நன்னெறியில் நிறுத்தி இன்புறும் நிலையில் அமைத்திடுவான். நல்லுயிராக இருப்பின் மேலும் நன்னெறியில் உய்த்துச் செலுத்திச் சென்று இன்ப அன்பினில் அமைத்திடுவான்.

எல்லா உயிர்களிடத்தும் இறைவன் தங்கியிருக்கிறான். உயிர்களிடத்தில் அன்பு காட்டுதல், இறைவனுக்கு அன்பு காட்டுதல் போலாகும். எல்லாவுயிர்களும் இறைவனின் அருளுக்குப் பாத்திரமானவை என்ற கொள்கை உறுதிப் பட்டுவிடுமாயின் போரற்ற உலகத்தைக் காணலாம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் இனிய சமுதாயத்தைக் காணமுடியும். இன்றுள்ள நிலை என்ன? உள் நாட்டில் சாதி, வகுப்பு கலவரச் சண்டைகள்! மதமாற்றத்திற்குரிய முயற்சிகள்! உயர்ந்த மனித சமுதாயத்தைப் படைக்க வேண்டிய மதங்கள் இத்தகைய இழிநிலையான போட்டிகளில் ஈடுபடுகின்றன. ஏன் இந்த அவலம்? வேறு ஒரு சமயத்திலிருந்தால் இறைவன் அருள் கிடைக்காது என்று சொன்னால் கடவுள் எப்படிப் பூரணமானவன் எனப்படுவான். நிறைவு இல்லாத ஒன்று எப்படி நிறைவைத் தர முடியும்? மதமாற்றம் என்பது மதத்துக்காகச் செய்யப்படுவதுமில்லை கடவுளுக்காகச் செய்யப்படுவதுமில்லை.