பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

95


இல்லாமையால்தானே தீண்டத்தகாதவர் என்ற சொல் பிறந்தது. தமிழர்களில் தாமும் ஒருவர் என்று கூட அவர்கள் சிந்திப்பதில்லையே!ஆதலால் இந்திய சமூகத்தில் உள்ள வேற்றுமைகள் ஒற்றுமை காணும் அடிப்படைக் குரியன அல்ல.

ஆதலால், இந்திய சமூக வேற்றுமைகளைப் புறக்கணித்து ஒரு குலம் காண ஆசைப்படுகிறான் பாரதி. ஒரு குலம் மட்டும் அமைந்தால் போதுமா? குலம் என்பது ஒரு மொழி, ஒரு சமயம் இவற்றுக்குள் காணப்படும் உட்பிரிவுகள். இந்தியா பெரிய நாடாயிற்றே! இந்தியா பல்வேறு மொழிகள் பேசும் மக்கள் வாழும் நாடு; பல்வேறு சமய நெறிகளை மேற்கொண்டொழுகும் மக்கள் வாழும் நாடு. இந்த இன வேற்றுமைகளை நீக்கி ஓரினமாக-இந்தியராக ஆக்க வேண்டும் என்று பாரதி விரும்புகின்றான். பாரதி, அம்மையை வழிபடும் உளப்பாங்கினன்; சக்தி உபாசகன். ஆயினும் இந்தியாவில் வாழும் மக்கள் வழிபடும் அனைத்துக் கடவுள்களையும் ஏற்றுப் போற்றுகின்றான்.

"ஆத்திசூடி இளம்பிறை அணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந் துணராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்;
அதனிலை கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம்.

(புதிய ஆத்திசூடி-பரம்பொருள் வாழ்த்து)

என்றும்,