பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

97


வழக்கம் போல நடைபெற்றுக் கொண்டுவருகின்றன. இன்றைய மதம், செய்ய வேண்டிய பணிகளைச் செய்யவில்லை. அது மனிதகுல ஒருமைப்பாட்டுக்கும் உலக அமைதிக்கும் போராட மறுக்கிறது. ஆதலால் இன வேற்றுமைகளும் களையப்பட வேண்டுமென்பதே பாரதியின் நோக்கம். எனவே "எல்லாரும் ஓரினம்" என்கிறான். ஆம்! இந்தியர், எல்லாரும் ஓரினம்! - இதுவே பாரதியின் இலட்சியம்.

எல்லாரும் இந்தியர் என்று சொன்னால் மட்டும் போதுமா? எல்லாரும் எல்லாம் பெற்று ஓர் நிறையாக வாழ வேண்டாமா? அப்படி வாழ்ந்தால்தான் இந்தியா ஒரு நாடாகும். "ஓர் குலம்!", "ஓர் இனம்" என்ற கொள்கை உறுதிப்படும். அடுத்து "எல்லாரும் ஓர் நிறை” என்று பாடுகிறான். ஓர் நிறை என்ற சொல்லில் சோஷலிசப் புரட்சியின் கருத்தை உள்ளடக்கம் செய்துள்ளான். பாரதியின் நூற்றாண்டு விழா வருகிறது. நாடு நிச்சயமாக விழாக் கோலம் கொள்ளும். விழா, முழக்கொலிகளுக் கிடையில் பாரதியின் சுதந்திரமும் அழுகையும் நிறைந்த குரல் கேட்கும்! உய்த்துணர்வார்க்குக் கேட்கும். இந்தியர்கள் அனைவரும் இன்று ஓர் நிறையிலா வாழ்கிறார்கள்?67 விழுக்காட்டுக்கு மேற்பட்ட மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர். ஏகபோகங்களும் உண்டு. நாளைக்கு என்ன? என்ற உத்தரவாதமின்றி வாழ்வோர் எண்ணிக்கை ஒன்றா? இரண்டா? எல்லாரும் ஓர் நிறை என்ற சமுதாயத்தை அமைக்காதவரை பாரதியின் ஆன்மா சாந்தி பெறாது. ஓர் நிறை மட்டுமின்றி "ஓர் விலை" என்றும் பேசுகிறான் பாரதி. நிறை என்பதை கல்வி, அறிவு, தறுகண்மை முதலியவற்றை எண்ணிச் சொல்லியிருப்பான் போலும்! விலை என்பதைப் பொருளாதார சமத்துவத்தை எண்ணிப் பேசியிருப்பான் போலும். நிறை, விலையைச் சார்ந்தது. விலை, நிறையைச் சார்ந்தது. இன்று இந்தியர்கள்