பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

101



உரியது ஆங்கிலம்தான் என்றும் ஒருபுறம் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். உலகத்தின் எல்லா மொழிகளிலும் அறிவியற் கருத்துக்கள் கால் கொள்ளும் முன்பே தமிழ் மொழியில் அறிவியற் கருத்துக்கள் கால் கொண்டன. "வலவன் ஏவா வானவூர்தி" 'சீவகனின் மயிற்பொறி" ஆகியவை வானூர்தி விஞ்ஞான வளர்ச்சிக்கு எடுத்துக் காட்டுக்கள்! பூம்புகாரிலிருந்த சதுக்கங்கள் இன்றைய "கம்ப்யூட்ட"ருக்கு முன்னோடிகள். இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெருவுடையார் கோவிலும், கரிகாலன் கட்டிய கல்லணையும் பொறியியலுக்குச் சரியான எடுத்துக்காட்டுக்கள்! இங்ஙனம் வளர்ந்த தமிழ் மொழி, காலப்போக்கில் அயல் மொழிகளின் ஊடுருவல்களாலும், வையத்துள் வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை நெறிக்கு மாறான மாயாவாதக் கருத்துகளாலும் வளர்ச்சியில் தேக்க முற்றது. அதனால், தமிழின் வளர்ச்சியும் தடைப்பட்டது. அதன் காரணமாகத் தமிழின் திறனை உள்ளவாறறியாத ஆங்கிலம் படித்த சிலர், தமிழில் அறிவியல் வராது என்றும் அதற்குரிய நூல்கள் தமிழில் இல்லை என்றும் கூறித் தங்கள் அறியாமையைஅயல்மொழிக் காதலை வெளிப்படுத்துகின்றனர்.

பாரதிக்கு இந்த மனப்போக்கு பிடித்தமில்லை. தமிழில் அறிவியல் வராது என்று சொல்பவர்களைப் பேதைகள் என்று திட்டுகிறான். கடலில் கலம் ஒட்டி அயல் நாடுகளைக் கண்ட தமிழினம் காலப் போக்கில் நாட்டு எல்லைக்குள் முடம்பட்டுப் போயிற்று. கடல் கடத்தல் நன்றன்று என்ற சித்தாந்தம் வேறு மூடத்தனத்தை வளர்த்தது. அதனால், பாரதி எல்லைகளை-வரையறைகளை உடைக்கச் சொல் கிறான்; எட்டுத்திக்கும் செல்லச் சொல்கிறான். உலகத்தின் பல்வேறு நாடுகளில் வளர்ந்து வரும் சிந்தனைகளைத் தமிழுக்கு உரிமைப் பொருளாகக் கொண்டுவந்து சேர்க்கச் சொல்கிறான். பாரதி, தாய்மொழி என்ற எல்லைக்குள் நின்றானே தவிர சிந்தனையில் அறிவியலில் எல்லைகளுக்கு