பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

105


விளங்கியது; பொருள் வாழ்க்கையில் வளம் இருந்தது. ஒப்புரவுப் பெருநெறியும் வளர்ந்து இருந்தது. கொற்றம் சிறந்திருந்ததால் நீதி இருந்தது. வீரத்தில் சிறந்து விளங்கியதால் பனிமலை தொடங்கி, குமரிக்கடல் விழுங்கிய நிலப்பரப்பு உள்ளிட்ட பெருமைக்குரிய பேரரசு நிலவியது. உரோமானிய எழுத்தாளர்கள், உரோம் நாட்டு செல்வத்தைத் தமிழ்நாடு கொள்ளை கொள்வதாக அழுது புலம்பினார்கள். இங்ஙணம் புகழ்பூத்து வாழ்ந்த தமிழினத்தில் கடவுள் நம்பிக்கை நிலவியது. விண்ணளந்து காட்டி வினைமறைக்கும் திருக்கோயில்களைத் தமிழர்கள் கண்டனர். நகரமனைய பெரிய திருக்கோயில்கள் அமைத்தனர். வாழ்க்கையின் அனைத்துத் துறைகளையும் தழுவி முத்தமிழ் கண்டு வளர்ந்து முழுமையாக வாழ்ந்தனர்.

இங்ஙணம் புகழ் பூத்த தமிழினத்தின் வாழ்க்கையில் அயல்வழி ஊடுருவல்கள் தோன்றிப் பாழடித்து விட்டன. பாரதி, இந்த இழி நிலையை நினைந்து வருந்துகின்றான். உலகனைத்தும் புகழ வாழ்ந்த இனத்தின் இந்தத் தலைமுறையினர் அறியாமையில் பிணைப்புண்டு பாமரர்களாய், மனித நாகரிகத்துடன் வாழாமையால் விலங்குகளாய் வாழும் இழிநிலையை இடித்துக் காட்டுகிறான். தமிழ்நாட்டில் பிறந்து விட்டால் தமிழரா? தமிழில் பேசிவிட்டால் தமிழரா? இல்லை என்பது பாரதியின் கருத்து. இங்கனம் வாழ்பவர்கள் பெயரளவில்தான் தமிழர்கள். உயிரில், உணர்வில், வாழ்க்கையில் பழந்தமிழ் வாழ்க்கையைப் பேணுபவர்களே உண்மைத் தமிழர்கள். தேமதுரத் "தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்று பாரதி கனவு காண்கிறான். இக்கனவு ஒரளவு நினைவானாலும் நிறைவாக நடைபெறவில்லை. தமிழ் நாடு அரசு உலகத் தமிழ்ச் சங்கம் பற்றி, உலகத் தமிழ் மாநாட்டின்போது அறிவித்தது. இது குறித்து விரைந்தினிது முடிக்கும் செயற்பாடு தேவை. உலகம்கு. VI. 8.