பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



முழுவதும் பரவி வாழும் தமிழரல்லாதவர்களும் தமிழ் கற்கும்படியும் தமிழிலக்கியங்களைச் சுவைத்திடும்படியும் செய்ய உலகத் தமிழ்ச் சங்கம் தேவை. இது பாரதியின் வேணவா.

பாரதியின் எச்சரிக்கை

உயிரினம், வளர்ச்சித் தன்மையுடையது. ஓயாது வளர்ந்து வரும் இனம்தான் வரலாற்றில் இடம் பெறும்; சிறப்புடன் வாழும் ஓர் இனத்தின் வளர்ச்சிக்கு உந்து சக்திகளாக அந்த இனத்து வாழ்க்கையின் படிப்பினைகள் மட்டுமின்றி, உலகின் பல்வேறு இனங்களின் வளர்ச்சியும் காரணமாக அமையும். ஒன்றோடொன்றை ஒப்பு நோக்கும் போதுதான் வளர்ச்சி அறிந்துணரப் பெறும்.

ஒப்பு நோக்கிற்கு எப்பொழுதும் சான்றோர், உயர்வு நலஞ்சார்ந்ததையே எடுப்பர். ஆதலால் எந்த ஓர் இனத்தின் வளர்ச்சியிலும் சார்பு இருக்கும்; இருக்க வேண்டும். அதாவது உலகின் மற்ற இனங்கள் வளரும் போதெல்லாம் உலகின் ஒவ்வோரினமும் தம்மையும் வளர்த்து உயர்த்திக் கொள்ள வேண்டும். அப்படி இல்லாது ஓரினம் பின்தங்கிப் போனால் பின்தங்கிய இனம் வரலாற்றில் நிற்க முடியாது. காலப் போக்கில் அழியும் அல்லது அடிமைப்படும்.

சான்றாக, நமது இந்து சமயம் என்று கூறப்பெறும் சைவ வைணவ சமயங்கள் காலத்தால் மூத்தவை; கருத்தாலும் மூத்தவை. ஆயினும் உலகின் மற்ற சமய நெறிகளாகிய கிறித்துவ-இசுலாமிய சமய நெறிகளின் பணி நிலை, சமய நிலை, சமூக நிலைகளை அறிந்து ஆராய்ந்து, தனது நிலைகளை மாற்றிக்கொள்ள முன் வராததால் ஒரு தேக்கம் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறதல்லவா? அது ஒருபுறம் இருக்கட்டும்.