பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கூடுவதெல்லாம் சமூகமாகிவிட முடியுமா? சமூகப் பொறுப்புக்களில் கடமைகளில் வளரவில்லை. சமுதாயம் இல்லவே இல்லை. சமயத் துறையிலும் அவை கூறும் தத்துவங்களுக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் இன்று ஒட்டும் உறவும் இல்லை. வழிபாட்டில் அமைந்துள்ள அம்மை அப்பன் கடவுள் தத்துவம் வழிபாட்டிற்கும்தான்; நாட்டு நிலையிலும் அப்படியேதான்.

இந்தியா ஒரு நாடு. இந்தியர்கள் ஒருநாட்டு மக்கள். ஒரு குடியாக வாழ வேண்டியவர்கள். ஆனாலும் எண்ணத் தொலையாத வேற்றுமைகள்! பகைமை உணர்ச்சிகள்! சமுதாய மாற்றங்கள் புறத்தே நிகழ்கின்றன. பல்கலைக் கழகங்கள் தோற்றமளிக்கின்றன. ஆனால், அறிவு பெருக்கத்தைக் காணோம். தொழிற்சாலைகள் தோன்றுகின்றன. வாழ்வித்து வாழும் பெருந்தன்மை தோன்றவில்லை. வறுமைக் கோட்டிற்குக் கீழ் 67% மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஊராட்சி மன்றங்கள் காட்சியளிக்கின்றன. ஆள்வோரைக் காணோம். ஆள்வோருக்குப் பதிலாக அச்சுறுத்துவோரே காணப்படுகின்றனர். "ஆளுதல்’ உயர்ந்த பண்பின் வழிவரும் தொழில் உரிமை. ஆளுதற் பணி அறிவித்து, தெளிவித்து, உணர்த்தி, நெறிப்படுத்தி, வழிநடத்தி, வாழ்வித்தல் என்பதே. இப்பணிக்கு நிறைந்த அன்பு தேவை, அருள் உள்ளம் தேவை. இங்ங்னம் ஆளப்படுதல் பெரிய பேறு.

ஆனால், இன்று "ஆளுதல் அதிகாரச் சார்புடையதாகி உயர்வுடையதாகக் கற்பிக்கப் பெற்று அச்சுறுத்தல்களுக்குரியதாக மாற்றம் அடைந்திருக்கும் அவலத்தை யார்தான் மறுக்க இயலும்? கோட்டைகள் உயர்ந்து தோற்றமளிக்கின்றன. குடிமக்கள் இளைத்து இழக்கின்றனர். உரிமைகள் பரிமாற்றம் செய்தல், குற்றங்களைக் கண்டு பிடித்தல், தண்டனை வழங்கல் ஆகியன ஆளுமையின் புறத்தோற்றங்கள்! தகுதியிழந்த நிலைகள்! இத்தகு முறைப்பிறழ்வால் மக்கள் காலப்போக்கில் அடிமைகளாகி விடுவர்.