பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

113


பதிகள். ஆயினும், அந்த அவையில் கூட அதாவது சந்நியாசிகள் கூட்டத்தில் கூட "பார்ப்பனர்-தமிழர்” என்ற பேச்சு அடிபடுகிறது. சந்நியாசிகளுக்குச் சாதி இல்லை என்பர். ஆனால் இந்தச் சாதிச் சனியன் இன்று பிடித்தாட்டுவது சந்நியாசிகளைத்தான்! அதுவும் பீடாதிபதிகளைத்தான்!

இன்று, பார்ப்பனரை ஐயர் என்று வழங்கும் வழக்கு பெரு வழக்கு வெள்ளைப் பரங்கியர் இல்லை. ஒடி விட்டனர். ஆனாலும் நமது நாட்டின் பெரிய அதிகாரிகளைக் குறிப்பாக காவல்துறை அலுவலர்களை "துரை” என்றுதான் இன்னும் அழைக்கின்றனர். பாவமன்னிப்பு என்று கூறியும், காரிய சாதனைகள் என்று கூறியும் கையேந்திப் பணம் வாங்குகின்றனர். ஆனால், கொடுப்பவன். பணிகின்றான். வாங்குபவன் நிமிர்ந்து நடக்கின்றான். இது பாரதி காலத்திலிருந்த கொடுமை. இன்றும் அதே நிலைதான்.

அடுத்து, ஏய்ப்போருக்கு ஏவல் செய்ய வேண்டும் என்பது. இன்று எங்கும் எத்திசையிலும் ஏய்ப்போர் கூட்டத்தின் கொட்டம் தானே! நமது செல்வத்தைக் கொள்ளை கொண்டு திரும்ப அதை நமக்குக் கிள்ளி வழங்கி, வள்ளல்கள் ஆகிறவர்களுக்கு ஏவல் செய்து தானே இந்த நாட்டு ஏழைகள் பிழைக்கின்றனர். இந்த நிலையிலும் மாற்றமில்லை.

"எல்லாரும் சமம் என்பது உறுதியாச்சு” என்று பாரதி பாடுகிறான். ஆனால், இன்று சமநிலை எங்கும் இல்லை. பாரதி வெறுத்துத் தொலைக்க வேண்டும் என்று எண்ணிய பொய்யும் ஏமாற்றும் இன்று எங்கும் தலைவிரித்தாடுகின்றன. நல்லோர் நாடறியாமல் ஒதுங்கி வாழ்கின்றனர். ஆனால், பேதங்களை வளர்த்து, பொய்ம்மையைப் பெருக்கி வாழ்பவர்கள் பெரியோர் என்று விளம்பரப்படுத்துகின்றனர். பாரதியின் சித்தாந்தப்படி இன்னும் நல்லோர் பெரியோரில்லை. சுதந்திர நாட்டில் உழைப்புக்கு மரியாதை, உழைத்து