பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


களை நடத்த அனுமதிக்கக் கூடாது. நாட்டு மக்களைத் தனி நலம் சார்ந்த வாழ்க்கையிலிருந்து கூட்டுப் பொது நலம் சார்ந்த வாழ்க்கைக்கு வளர்த்தாக வேண்டும்.

இந்திய மாநிலங்களுக்கிடையில் உள்ள உறவுகளை, எல்லைகளை நிர்ணயிக்க மாநிலங்களின் பேராளர்கள் அடங்கிய ஓர் உயர்மட்டக் குழு அமைய வேண்டும். நாடு ஒன்று என்னும் நினைவு தோன்றிய பிறகும் ஆட்சி முறைகள் அமைந்த பிறகும் காவிரிச் சிக்கல் தீரவில்லையென்றால் ஒரு நாடு என்ற உணர்வு ஏற்படவில்லை என்பதே உண்மை. இதற்கு ஆயிரம் சமாதானம் சொன்னாலும் ஏற்பதற்கில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களைத் தழுவி நிற்பவை அனைத்தும் நாட்டுடைமைகளாக வேண்டும். கங்கை காவிரி போன்ற, ஆறுகள் நாட்டு ஆறுகளாக எண்ணப் பெறுதல் வேண்டும். மாநிலங்களை இணைக்கும் சாலைகளைத் தேசிய நெடுஞ்சாலைகளாக ஆக்கிய நமக்கு இவைகளை நாட்டு ஆறுகளாக ஆக்குவதில் என்ன தயக்கம்? அது போலவே இந்திய மொழிச் சிக்கலுக்கும் தீர்வு கண்டாக வேண்டும். நாட்டு மொழிக் கொள்கையில் ஒதுங்குதல்-ஒதுக்குதல் போன்ற கொள்கைகள் ஆதிக்கம் பெறக்கூடா.

இங்ஙனம் பல்வேறு செயல் முறைகளால் நாட்டை வலிமைப்படுத்தும் இயக்கம் தேவை. மீண்டும் இந்தியாவுக்கு வெளியில் இருந்து ஆபத்து ஏற்படும் சூழ்நிலை இருக்கிறது. உலக வல்லரசுகளின் போட்டி இந்தியாவை, பாதிக்கத்தக்க வகையில் மையம் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானிடமிருந்தும் சீனாவிடமிருந்தும் நமக்கு ஆபத்து நீங்கியபாடில்லை. மனிதகுலத்தின் மேம்பாட்டிற்காகத் தோன்றிய அறிவியல் இன்று அழிவின் எல்லையில் போய் நிற்கிறது. உயிர்களை எல்லாம் அழித்து விட்டு உடைமைகளைப் பாதுகாக்கும் நீர்வாயுக்குண்டு தோன்றியிருக்கிறது. உடைமைகள் மனிதர்களுக்கு என்பதற்குப் பதிலாக மனிதன்