பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

121




போல், கொள்கையில்லாத-தேர்தல் வெற்றியையே குறிக்கோளாகக் கொண்ட கூட்டணிகள்! இந்தத் திருவிளையாடல்களைப் பார்க்கிறோம்.

தேர்தல்கள், அரசியலைப் படிப்பிக்கும் கருவிகளாக மாறவேண்டும். நாட்டு மக்களின் நலிவு தீர்க்கும் கொள்கை, மக்கள் முன் வைக்கப்பெறுதல் வேண்டும். தேர்தல் என்பது ஒரு கொள்கைக்குத் தரும் வாக்கு. தேர்தல் என்பது ஒரு கொள்கை பெற்ற வெற்றிக்கு அளிக்கும் வாக்கு. இப்பொழுது நடைபெறும் தேர்தலில் கொள்கையாவது? செயலாவது? யாதொன்றும் இல்லை!

இத்தகு முறைகேடான அரசியல் வாழ்க்கை நடைபெறுவதால்தான் செல்வந்தர்கள் அரசியலை விலைக்கு வாங்குகின்றார்கள். திரும்ப அந்த அரசியலைக் கொண்டே செல்வத்தைக் குவிக்கின்றார்கள். இந்தத் தீயவட்டம் சுழன்று கொண்டேயிருக்கிறது. ஏழைகளோ அன்றாடம் காய்ச்சிகள்! அவர்களுக்கு அன்றாடம் பொழுது போனால் போதும் என்றாகிவிட்டது.

நாட்டில் கட்சிகளுக்கு என்ன குறைவா? அரசியல் பேச்சாளர்களுக்குக் குறைவா? யாதொரு குறைவுமில்லை. ஆனால், நாட்டு மக்களில் 67 விழுக்காட்டு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஏன் இந்த நிலை? நாட்டுப் பணி செய்ய ஆளைக்காணோம். கூட்டுறவு இயக்கங்களில் ஈடுபட்டு சமுதாயப் பொருளியற் புரட்சிக்குத் தொண்டு செய்யும் ஆட்களைக் காணோம். சுதந்திர தினவிழாக் கொண்டாட யாரையும் காணோம். குடியரசு தினவிழாக் கொண்டாட யாரையும் காணோம்! ஆனால், தேர்தல் காலச் சுற்றுலாக்களுக்குப் பலர் முனைந்துள்ளனர். அரசியல் மேடையில் பேச அப்பப்ப, எவ்வளவு போட்டி, அதுவும் நம் நாட்டு மக்கள் அரசியல் பேச்சாளர்களை மட்டமாக வளர்த்திருக்கிறார்கள். எதிர்க் கட்சியைக்-