பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கிண்டலாக, கேலியாகப் பேசினால் சுவையாகக் கேட்கிறார்கள். நமது நாட்டு மக்களின் செவிநுகர் சுவையின் தரம் குறைந்துவிட்டது.

இந்தச் சூழ்நிலையில் இந்த நாடு வறுமைப்பட்டுக் கிடக்கிறது. நாட்டு மக்களில் பாதிப் பேருக்கு மேல் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள். அன்னை பாரத தேவி 5,000 கோடி கடன் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறாள். ஏன் இந்த அவலம்? நாட்டில் வெற்று அரசியல் வளர்ந்து வருகிறது. விவேகம் வளரவில்லை. பொருளாதாரப் புரட்சிக்கு முன்நின்று உழைக்கும் உத்தமர்களைக் காணோம். இந்த நிலை பாரதி காலத்தில் இருந்தபடியே இன்றும் இருக்கிறது. ஒரு தலைமுறை மடியப் போகிறது. அடுத்த தலைமுறை அதாவது இன்று வளரும் தலைமுறை நம்பிக்கை அளிப்பதாக இல்லை. யுகப் புரட்சி செய்த பாரதிக்கு என்ன செய்யப் போகிறோம்?

"தாயைக் கொல்லும் பஞ்சத்தைத்
தடுக்க முயற்சி யுறார்.
வாயைத் திறந்து சும்மா-கிளியே
வந்தே மாதரம் என்பார்”

- பாரதி


அறமே பெரிதென அறிக!

இன்று நம்முடைய நாடு சென்று கொண்டிருக்கும் நிலை இரங்கத் தக்கது. இந்தச் சூழ்நிலைக்குப் பாரதியைவிட சிறந்த மருத்துவனில்லை. இன்று இந்திய நாட்டு மக்களிடையில் "இந்தியர்” என்ற உணர்வு இல்லை. இந்தியர் என்ற உணர்வைச் சாதி, குலம், கோத்திரம், மொழி, சமயம் முதலிய உணர்வுகள் தோன்றாமல் அழியச் செய்கின்றன. எங்கு பார்த்தாலும் சிறு சிறு குழுக்கள்! அக்குழுக்களிடையிலும் கூட கூட்டமைப்பு உணர்வில்லை. ஏதோ ஒரு தன்னல நயப்பின் காரணமாகக் குழுக்களாய்க் கூடுகின்றனர்.