பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கொடையாகத் தந்தவன் பாரதிதான்! எந்தச் சூழ்நிலையில் புரட்சி தோன்றும்? எதற்காகப் புரட்சி வெடிக்கும்? புரட்சியின் பயன் என்ன? என்று கவிஞன் பாரதி ஐயத்திற்கிடமின்றி விளக்குகின்றான். நாட்டாட்சி, புரட்சிக்கு முன்பு புரட்சி தோன்றுவதற்குரிய களம். அங்கே உழுது விதைத்து அறுப்பாருக்கு உணவில்லை; பிணிகள் பல உண்டு; பொய்யைத் தொழுது அடிமை செய்வார்க்குச் செல்வச் செழிப்பு உண்டு; உண்மை சொல்வோர் ஒதுக்கப்படுவர்; . சிறையில் தள்ளப்படுவர். ஏன்? தூக்கும் உண்டு! நல்லோர் சான்றோர் நாட்டில் ஒதுக்கப்பட்டவர்கள். இத்தனை அநியாயங்களும் ஆட்சியின் பெயரால்! அது மட்டுமா? மதப்புரோகிதர்களின் வாழ்த்துக்களுடனும் நடந்தன: மனித உலகத்தை அன்பு நெறியில் வளர்த்து, அருள் நெறியில் வாழ் விக்க வேண்டிய சமயங்கள், புரோகிதர்களின் ஆதிக்கத்திற்கு ஆளானவுடன் கறைபட்டு விட்டது! களங்கப்பட்டுவிட்டது. சமயம், தன் நிலையில் இல்லாமல் பொருள், அதிகாரம் ஆகிய போதை மயக்கத்திலிருந்ததன் காரணமாகவே மாமேதை மார்ச்சு, மதத்தை அபின் என்று சொன்னார் போலும்! இந்தக் கொடிய சூழ்நிலையில் சோவியத்தில் புரட்சி-இரத்தம் சிந்தாப் புரட்சி பிறந்தது. புரட்சியை நேரில் கண்டு வரவேற்பவனைப் போல் பாரதி, கங்கு கரையற்ற களிப்புடன் வரவேற்கின்றான்!

'ஆகா! என்று எழுந்தது பார்,
யுகப் புரட்சி'

என்று வரவேற்கின்றான் !

இந்திய நாட்டு மக்களுக்குச் சோவியத் புரட்சியை அறிமுகப்படுத்த ஆவல் கொள்கின்றான். பாரதி, சமய நெறியில் நின்றொழுகியவன்; கடவுள் நம்பிக்கையுடையவன். பாரதி, கடவுள் நம்பிக்கை மூலமே சமுதாயத்தில் புரட்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடையவன். இந்திய நாட்டு