பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதி ஒரு யுகசந்தி

129


மக்களுக்கும் கடவுள் நம்பிக்கை மிகுதி. அதனால் கடவுள் பெயரால் யார் எதைச் சொன்னாலும் நம்பி விடுவர்; கேட்பர். எனவே, சோவியத் புரட்சியைக் கடவுள் சம்பந்தப்பட்ட புரட்சியென்று சொன்னால் இந்த நாட்டு மக்கள் கடவுளின் பெயரால் புரட்சி செய்வர். சோவியத்தைப் போல் இங்கேயும் ஒரு சோஷலிசப் புரட்சி தோன்றும் என்று நம்பினான். அதனால், சோவியத் புரட்சியை மாகாளி, பராசக்தி கடைக்கண் வைத்ததால் எழுந்த புரட்சி - நடந்த புரட்சி, அருளியல் வழியில் நடந்த புரட்சி என்று கூறிப் புரட்சிக்கு நம்மை ஆயத்தப்படுத்துகின்றான்.

பாரதி, புரட்சி தோன்றுதற்குரிய அடிப்படைத் தன்மைகளை நினைந்தேபாடுகின்றான். எந்த நாட்டிலும் தொழிற்புரட்சி ஏற்பட்டு நாடு வளரும் பொழுதுதான் பொருளியல் புரட்சி மலரும் என்பது வரலாறு. வேளாண்மைத் தொழில் செய்யும் உழவனும் தொழிலாளியும் ஒன்று சேரும் பொழுதுதான் புரட்சி தோன்றும். இவர்கள் உழைக்கும் அணியினர்.

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்பது பாரதியின் வாக்கு. வேளாண்மைத் தொழிலோடு தொழில் துறையும் சேர்ந்து சமுதாயப் புரட்சிக்கு அடித்தளம் அமைப்பதை நினைந்து பாடுகின்றான். பாரதி, "பிறர் பங்கைத் திருடுதல் வேண்டாம்” என்று பாடியதன் மூலம் மனித உலகத்தின் நச்சுத் தன்மையுடைய முதலாளித் துவத்தை வளர்க்கும் வேலை, கூலி, உபரி உழைப்பு என்ற தத்துவத்தை எளிதில் விளக்குகின்றான். உழைப்பாளிகள் உழைத்து உற்பத்தி செய்யும் பொருள்களில் உரிய கூலி தராது வரும் பகுதியே சுரண்டலாகி மூலதனமாகிறது. உழைப்பிற்குப் பயன்படாது உடம்பில் சேரும் கொழுப்பு நாளடைவில் நீரழிவு நோயாகி உடலை வருத்துதல் போல், உழைப்பாளருக்கு உரியவாறு பயன்படாது சுரண்டலால் சேமிக்கப் பெறும் மூலதனம் காலப்போக்கில் மனித-