பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3


பாரதியின் கனவுகள்

பாரதி ஒரு நல்ல கவிஞன். நல்ல கவிஞன் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, தான் வாழுகின்ற காலத்தை நன்றாகக் கணித்து அதனுடைய நிலைகளைக் கூர்ந்து, அறிந்து நாட்டை எந்தத் திசையில் அழைத்துச் சென்றால் வெற்றி பெறும் என்ற ஆய்வையும் செய்து, சிறந்த முறையில் வழிகாட்டுகிறவன் தான்! அவன், காலத்திற்கு இசைந்த கவிஞன்.

சிலர் கருதுவதைப் போலக் காலத்திற்கு இசைந்த கவிஞன் என்று சொன்னால் அந்தக் காலம். விரும்புகிற கொச்சைச் செய்திகளை மட்டும் பாடிவிட்டுப் போவதல்ல. அஃதொரு மலிவான சரக்குமாக இருக்கக் கூடாது; இடித்துச் சொல்கிற திறனும் இருக்கவேண்டும்; எடுத்துச் சொல்கிற ஆற்றலும் இருக்கவேண்டும் தானே, அதற்காகக் கடமைகளைச் செய்கிற அர்ப்பணிப்பு - மனப்போக்கும் இருக்க வேண்டும். இவை அனைத்தும் எந்தக் கவிஞனிடத்தில் இருக்கிறதோ அவன் காலத்திற் சிறந்த கவிஞன். காலத்திற்கிசைந்த கவிஞன்.

பாரதி அத்தகைய கவிஞன் என்பதில் இரண்டு விதமான கருத்து இருக்க முடியாது. எந்தக் கவிஞன் தான் வாழுகின்ற காலத்தைப் புரிந்து கொண்டிருக்கின்றானோ-