பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

139


சாதனையைச் செய்திருக்கிறது - வெற்றி பெற்றிருக்கிறது என்று கூடச் சொல்லமுடியும்.

கீழ்த்திசை நாடுகளுக்கு அண்மையில் நாம் பயணம் மேற்கொண்டபோது ஜப்பான் நாட்டிலே சில தொழில்களைப் பற்றி ஆராய்ந்தோம். அதுபோது “எங்கள் நாட்டிலா நீங்கள் தொழிலைப் பற்றி அறிந்து கொள்ள வருகிறீர்கள்! உலக நாடுகளிலே எலக்ட்ரானிக் தொழிலில் உங்கள் நாடு மிகப் பெரிய இடத்தை வகிக்கிறதே" என்று சொன்னார்கள்.

எனவே, இந்தியா விடுதலை பெற்ற பிறகு தொழில் துறையில் வளர்ந்திருக்கிறது. நம் தொழில் நுட்பம் வளர்ந்திருக்கிறது. நம்முடைய நாட்டில் அறிஞர்கள் வளர்ந்திருக்கிறார்கள் அறிவியல் வளர்ந்திருக்கிறது. இந்தத் துறையில் எந்தவிதமான தொய்வும் இல்லை என்றுகூட நம்மால் உறுதியாகச் சொல்லமுடியும்.

ஆனால், அறிவியல் ஆய்வுக் கூடத்தில் அறிவியல் வளர்ந்து விடலாம். தொழிற்சாலைகளில் உற்பத்தி பெருகலாம்; புதிய தொழில்கள் நாட்டிலே உருவாகியிருக்கலாம். ஆனால், அவற்றின் பயன்கள் எதிர் விளைவுகள் மக்களிடத்தில் எப்படிச் சென்றிருக்கின்றன என்று ஆய்வு செய்யவேண்டும். பாவேந்தன் பாரதிதாசன் சொல்வான்,

"ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில் சலசலவென எவ்விடத்தும் அறிவியலைப் பாய்ச்சிவிட வேண்டும்” என்று. மக்கள்கூடும் இடங்களில் எல்லாம் அறிவியலைப் பற்றி தொழிலியலைப்பற்றிப் பேசி ஆய்வு செய்கின்ற காலத்தில்தான் இந்தநாடு வளரும் என்று சொன்னான் பாவேந்தன்.

எல்லாத் துறையிலும் இந்தியா எந்த நாட்டுக்கும் இளைத்ததல்ல என்ற பெருமையை இன்றைக்குப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. பாரதி கண்ட அந்தக் கனவுகள் அரசின் வாயிலாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அதற்கு உறுப்புக்-