பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

143


இருக்கிற எண்ணிக்கையும் தெரியும். இதில் நாம் குறிப்பிடத்தக்க வெற்றிபெற்று வந்திருக்கிறோம்.

பாரதி பாடிய போது முப்பதுகோடி மக்கள் இருந்தனர். அது இன்றைக்கு ஒன்றுக்கு இரண்டாகி அதற்கு மேலேயும் போய்க் கொண்டிருக்கிறது. பாரதி, அந்த முப்பது கோடி மக்களையும் ஒரு சங்கமாகக் கண்டான். ஒரே குடும்பமாகக் கண்டான்; அந்தக் குடும்பத்தைப் பொது வுடைமைச் சமுதாயமாகவும் கண்டான்.

"பொதுவுடைமைச் சமுதாயம்” என்றாலே பலர் முகம் சுளிக்கிறார்கள். பொதுவுடமைச் சமுதாயம் என்பது ஒரு பயங்கரமான சமுதாய அமைப்பல்ல. அதைப்பற்றித் தவறான தகவல்கள் நிறைய பரப்பப் பெற்றுள்ளன. அங்கே மக்களாட்சி உரிமைகள் - அடிப்படை உரிமைகள் எல்லாம் பறிபோகும் என்று சொல்கிறார்கள். ஒரு வீட்டில் மகிழ்ச்சி ஒரு வீட்டில் துன்பம் ஏன்?

சங்க காலத்துக் கவிஞன் பாடுகிறான். “ஒரு வீட்டிலே மகிழ்ச்சி ஏன்? இன்னொரு வீட்டிலே துன்பம் ஏன்? என்று! இரண்டாயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன் இந்த நாட்டுத் தமிழ் மண்ணிலே பிறந்த தமிழ்க் கவிஞனுடைய குரல் அது! தெளிவாகச் சொன்னால் இயற்கை நியதி மாற்ற முடியாதது - என்கிற மரணத்தைப் பற்றிய செய்தியைக் கூட அவன் கேள்வி கேட்கிறான். "இப்படித்தான் உலகம் இருக்கும்” என்று சொன்னால் அவன் அதை மறுக்கிறான்.

கடவுள் இப்படித்தான் படைத்து விட்டான் என்று சொன்னால் அந்தக் கவிஞனுக்குக் கடவுள் மீதே கோபம் வருகிறது. "அவன் பண்பில்லாதவன்" என்று ஏசுகிறான். கடைசியில் இந்நாட்டு மக்களுக்கு அவன் ஒரு செய்தி கொடுத்தான்.துன்பமாகத்தான் இருக்கும்! ஆனால் இப்படிச் சொல்லி ஏமாற்றாதே! ஒந்த உலகத்தை இனியதாக்குக என்று சொன்னான்.