பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6

பாராட்டி விருதளித்துச் சிறப்பித்தார்கள். இதய விசாலத்தால் இந்நாள் பாரியாக குன்றக்குடியை ஓர் இலட்சியக் குடியரசாக அன்புச் செங்கோல் செலுத்தி அரசாண்டிருந்தார்கள்.

மனித நேயத்தின் மாணிக்கக் கனியாக விளங்கிய அடிகளார் அருட்கொலு வீற்றிருந்த காலத்தில் மேடைத் தமிழ் வித்தகராகவும், இதழாசிரியராகவும். பன்னூற் படைப்பாளராகவும் தம் சிந்தனைகளைப் பகிர்ந்தளித்திருக்கிறார்கள். வருங்காலத் தலைமுறைகளுக்கு அக் கருவூலத்தைச் சேமித்துத் தரவேண்டும் என்று இன்று குன்றக்குடித் திருமடத்தில் அருள் தலைமை ஏற்றிருக்கும் தவத்திரு பொன்னம்பல அடிகளார் எண்ணினார்கள். அவ்வெண்ணத்தைத் திறம்பட வடிவமைத்து அடிகளாரின் நூல் தொகுதிகளைச் செந்தமிழ்க் காவலர் ச.மெய்யப்பன் ஏற்கெனவே ஐந்து தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்.

அந்த வரிசையில் ஆறாவது தொகுதியாக வெளிவரும் இந்நூல் அடிகளாரின் இலக்கியப் பார்வைகளைச் செழுமையாகத் தொகுத்துத் தருகின்றது.

மகாகவி பாரதியார், பாவேந்தர், பட்டுக்கோட்டையார், பேரறிஞர் அண்ணா ஆகியோர் படைப்புகளைத் தமக்கே உரிய புதிய கோணத்தில் இருபது கட்டுரைகளில் வழங்கியுள்ளார் அடிகளார். இவற்றுள் பதினைந்து கட்டுரைகள் பாரதியாரைக் குறித்து எழுதப்பட்டிருப்பதால் அம்மகா கவிக்கே சமர்ப்பணம் ஆகத்தக்க நூல் இது என்று குறிப்பிடலாம்.

பாரதியார் ஒரு வைரச் சுரங்கம். அவருக்குள் ஆழச் செல்லச் செல்ல எடையிலும் ஒளியிலும் விலை மதிப்பிட முடியாத வைரங்கள் எப்போதும் கிடைக்கும். அப்படி மணிக்கற்களை அள்ளி வந்த அறிஞர் பெருமக்களில் அடிகளார் தனித்துவம் மிக்கவர்.

காலத்துக்கும் களத்துக்கும் இசைந்தவாறு கவிஞர் பெருமான் தந்த கருத்துக்களை வகுத்தும் தொகுத்தும் எடுத்தும்