பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

163


பொதுவாக இருப்பதைப் போல எல்லாச் சமயங்களுக்கும் பொதுவான அரசு என்ற அடிப்படையில் "சமயச் சார்பற்ற அரசு" என்று தன்னை இந்த நாடு எடுத்துக்கொண்டது. அது எவ்வளவு நுட்பமானது; எவ்வளவு வரலாற்றுப் போக்குச் சிறப்புடையது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆனால், மீண்டும் இந்த நாட்டில் மதச் சண்டைகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. இசுலாமியர்கள் கிறித்து வர்கள், இந்துக்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்கிற மனப்போக்கு வளர்ந்து வருகிறது. இந்த மனப்போக்கு பாரதிக்கு எதிரான கருத்து; காந்தியடிகளுக்கு எதிரான கருத்து. பல நூற்றாண்டுகளாக நாம் வளர்த்து வந்திருக்கிற கருத்துக்கு மாறான கருத்து என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

ஒன்று பரம்பொருள் என்ற நம்பிக்கை வேரூன்ற வேண்டும். நாம் அதனுடைய மக்கள் என்ற நம்பிக்கை வளரவேண்டும். இந்த உலகத்தை இன்பக் கேணியாக மாற்ற வேண்டும். சமய உணர்வு நன்றாக வளர்ந்திருக்குமானால் இன்றைக்கு அதற்கு அறைகூவலாக இருக்கிறது கிறித்துவமும் அல்ல; இசுலாமும் அல்ல. இன்றைக்கு நீர் வாயு குண்டு தோன்றி உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது! சாலைகளை அமைத்து ஊர்கள் இணைக்கப்பட்டுவிட்டன. விஞ்ஞானத் துறையின் காரணமாக, விஞ்ஞானம் இன்று நாடுகளையும், கண்டங்களையும், அண்டங்களையும் இணைத்து வெற்றி பெற்றிருக்கிறது.

ஆனால், ஆன்மீக வாழ்க்கைக்குரிய மெய்ஞ்ஞானம் இந்த உலக வாழ்க்கையை, மானிட சாதியை இணைப் பதற்குப் பதிலாக, அது பிரிவினைகளை உருவாக்கி கொண்டு தன்னையே அழித்துக்கொள்கிற நிலையில் போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அதனால் இன்றைக்கு மனித உலகத்தை அழிக்கிற குண்டுகள் வரையில் தோன்றி மனித உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. எனவே