பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7

தொடுத்தும் தந்திருக்கின்றார் அடிகளார். கவிதைச் சுவடிக்குள் அடையாளம் காணப்படாமல் இருந்த பல செய்திகளை நுட்பமாகத் தேடி அடிகளார் அளித்திருக்கின்றார்கள்.

தலைவர்களுக்குப் பாரதியார் காட்டும் வழி என்ற முதற் கட்டுரையே இதற்குச் சான்று. சிறந்த தலைவர்களைக் குறித்துப் பாரதியார் பாடியுள்ள கவிதைகளிலிருந்து சீரிய தலைமைப் பண்புகளை இனம் கண்டு அடிகளார் எடுத்துக் காட்டியிருக்கும் திறம் வியப்புக்குரியது. தாதாபாய் நவுரோஜி 'கல்வியும் அக்கல்வியைப் போல் அறிவும், அறிவினைப் போல் கருணையும், அக்கருணைபோல் பல்வித ஊக்கங்கள் செயும் திறனும்' படைத்தவர் என்பார் பாரதியார். ஒருவகையில் சிறந்த தலைவருக்குரிய பண்புகள் இவை என்று கூர்ந்து காண்கிறார் அடிகளார். மாஜினியின் உயர்வும் தளர்ச்சியுமற்ற மக்கள் பணி, மகாத்மாவின் மன்னுயிர் எல்லாம் கடவுள் என்ற கோட்பாடு என பாரதியார் தலைவர்களிடம் காணும் உயர் குணங்கள் யாவையும் இன்றையத் தலைவர்களுக்கு இன்றியமையாத பண்புகள் என எடுத்துக் காட்டுகின்றார் அடிகளார்.

பாரதியாரை யுகசந்தியாகக் காணும் அடிகளார் ‘நல்ல பழைமை, புதுமையை ஈன்றெடுத்துத் தரும்’ என்ற கோட்பாட்டைப் பாரதியாரில் பொருத்திக் காண்கிறார். கலியுகம் என்ற கருத்தாக்கத்திலிருந்து கிருதயுகத்துக்குப் பாயும் பாரதியாரை, சமயங்களிடையே ஒருமை காணும் பாரதியாரை, உழவுக்கும் தொழிலுக்கும் பாலமிடும் பாரதியாரைப் பல நிலைகளில் கண்டு அவன் யுக சந்தி என்பதை நிறுவுகின்றார்.

“எந்தக் கவிஞன் தான் வாழுகின்ற காலத்தைப்
புரிந்து கொண்டிருக்கிறானோ அந்தக் கவிஞன்
ஒரு காலத்தை உருவாக்குவான்”

என்று மொழியும் அடிகளார் பாரதியார் கண்ட கனவுகளை -சாதி ஒழிந்த சமுதாயம், மனிதர் உணவை மனிதர் பறிக்காத சமுதாயம் - குறித்த கனவுகளை விரிவாக விளக்குகின்றார்.