பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8

பாரதி வளர்த்த கவிதை பற்றி எழுதுகையில் வள்ளுவரின் சினத்தையும் பாரதியாரின் வஞ்சினத்தையும் (‘தனி ஒருவனுக்கு உணவிலையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’) ஒப்பிடும் மாட்சிமை துலங்குகின்றது. பாவேந்தர் காலத்துக் கேற்றவாறு ‘உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய்’ என்று இக்கருத்தை மாற்றியமைப்பதை எடுத்துக் காட்டிக் கருத்து நயம் காண்கின்றார். பாரதியின் தேசியப் பாடல்கள் கால வெள்ளத்தில் மதிப்பிழந்து அடித்துப் போகப்படுமா என்ற திறனாய்வாளர்களின் வினாவை முறியடித்து அடிகளார் கூறும் கருத்து புதிய ரத்தம் பாய்ச்சுகின்றது.

பாரதியின் விதி வாதம், பாரதியின் கடவுட் கோட்பாடு, பாரதியின் பொருளியல் கொள்கை, பாரதி வளர்க்க விரும்பிய மக்கட் பண்புகள் என மகாகவியின் சிந்தனைப் பிரபஞ்சத்துக்குள் அடிகளார் சிறகடித்துப் பறக்கின்றார்.

“கடவுளே, எனதருமை நாட்டை விழித்தெழச்
செய்யமாட்டாயா? பாரதியின் தடத்தில் உய்த்துச்
செலுத்த மாட்டாயா?”

என்று அடிகளார் எழுதும்போது, பாரதிக்குள் எத்துணை ஆழமாகப் பயணித்துள்ளார் என்பதைக் கண்டு சிலிர்த்துப் போகிறோம்.

பாரதியின் சக்திவழிபாட்டுக்குக்கூட ஒரு புது விளக்கத்தை அடிகளார் அருளிச் செய்திருக்கின்றார். மகா சக்திக்கு விண்ணப்பமாகப் பாரதி இயற்றியுள்ள ‘நல்லதோர் வீணை’ கவிதை அவருக்குக் கைகொடுக்கின்றது.

“பயனுற வாழ்வதற்காகச் செய்யும் வழிபாடே
ஆற்றல் வழிபாடு-சக்தி வழிபாடு”

என்று காட்டும் நேர்த்தி அடிகளாருக்கே கைவந்த அருங்கலை!

மகாகவியின் சிந்தனைகளை ஓர்அன்னப் பறவை போல் தனித்துப் பிரித்தெடுத்து, சமத்துவ சமுதாயம் காண விரும்பிய