பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

179


இறுதியில் ஆன்றோர்கள் தேசமடி" பாப்பா என்று முடிக்கின்றான். பாரதியைப் பொறுத்த வரையில் தேசம் என்ற சொல்லைப் பாரத நாட்டைக் குறிப்பதாகவே பல இடங்களில் பயன்படுத்தியுள்ளான். மேலும் அப்பகுதியிற் பாடும் பாரதி பாரத நாட்டிற்கு ஒன்றும்; தமிழ் நாட்டிற்கு ஒன்றும்; பின் பாரத நாட்டிற்கு இரண்டுமாக நான்கு கண்ணிகளை எழுதியுள்ளான். ஒற்றுமைப்பட்டு இணைந்து நிற்கும் பாரதத்தைப் பாப்பாவுக்கு வற்புறுத்தவே பாரதத்திற்கு மூன்று பாடல்களைப் பாடியுள்ளான். அப்படியானால்,


"தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற-எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா"


என்ற பகுதிக்குப் பொருள் கொள்வது எப்படி? "பாரதத் தாயைத் தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள் தாய் என்று கும்பிடு” என்று பொருள் கொள்ளவேண்டும். தமிழ்த்திரு நாடு ஒரு மகள்; அவளை ஈன்றெடுத்தவள் பாரதத்தாய் என்று பொருள் கொள்ள வேண்டும். ஏனென்றால் தமிழகம் உள்ளிட்ட பாரத நாட்டை-அன்று முப்பத்து முக்கோடி மக்கள் வாழ்ந்த பாரத நாட்டை ஒரு கூட்டமைப்பாகக் காண்கிறான்.

"முப்பத்து முக்கோடி மக்களுக்கும் ஒரு சங்கம் - அது பொதுவுடைமை” என்று பாடுகின்றான். அவன் தமிழனாகப் பிறந்து - தமிழனாகச் செத்தபோதிலும், பாரதநாடு என்று நோக்கும்போது தன்னைப் பாரத நாட்டுக் குடிமகனாக ஆக்கிக்கொள்ளும் வழியில் வளர்த்து வைத்திருந்தான். ஏன்? அதனிலும் மேலாக உலகக் குடிமகனாக வளர்கின்ற வரையில் தன்னை வளர்த்துக் கொண்டிருந்தான். அதனால் தான் பெல்ஜியப் புரட்சியை - சோவியத் புரட்சியை அவன் வாழ்த்த முடிந்தது - வாழ்த்தினான். இத்தாலியைக் கண்டு மாஜினியின் வீரமொழிகளை மொழி பெயர்த்துத் தந்தான். ஆகவே அவன் தமிழனாகவும், பாரதக் குடிமகனாகவும், ஏன்