பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

181


சிந்துநாட்டுக் கரைக்குச் செல்ல வேண்டும் என்கிறான். இசைக்கும் பாடல், தெலுங்காக மிளிரவேண்டும் என்கிறான். எனவே தமிழ் மணமகன் தமிழ் தேசீயத்தைத் தாண்டிக் கேரளத்தில் பெண்ணெடுத்து, இசையில் தெலுங்கை ஏற்று, பொருளாதாரத்திலே சிந்து நதித் தேசீயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்; கேரள, ஆந்திர, பஞ்சாப் தேசீயத்தைத் தமிழன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுவதன் மூலம் அனைத்துப் பிரிவுகளும் இணைந்த பாரத தேசீயத்தை வற்புறுத்துகிறான்.

பழங்காலத்தில் இந்தப் பாரத நாட்டில் 400-க்கும் அதிகமான பேரரசர்கள், 4000-க்கும் அதிகமான அரசர்கள், அவர்களுக்குக் கீழே கணக்கில் அடங்காத ஜமீன்தார்கள் இருந்தனர். நாடு, சிறுசிறு பகுதிகளாகப் பிரிந்து நின்று ஒருவருக்கொருவர் சண்டை சச்சரவுகள் வைத்துக் கொண்டதால்தான் அந்நியரிடம் அடிமைப்பட நேர்ந்தது. மொழி, உணர்வு என்பதெல்லாம் தேசீயத்தை ஒட்டியன அல்ல. மொழி ஒற்றுமை, சிந்தனை ஒற்றுமை, பொருளாதார ஒற்றுமை, இயற்கை பாதுகாப்பு அரண், என்று இந்த நாட்டை வெவ்வேறாகக் கூறுபோட்டுவிட்டால் நாட்டின் நிலை என்ன ஆகும்? எனவேதான்,

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில்
ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வே"


ஒன்றுபட்ட பாரதத்தின்-அதன் மேம்பாட்டினைக் கூறினான் பாரதி.

இத்தனையும் எண்ணும்போது தமிழ்த் தேசியம் வேண்டும் - தமிழ் நாகரிகம் வேண்டும். ஆனால் அதே காலத்தில் குடிமக்கள், நான் ஒரு பாரத நாட்டுக் குடிமகன் என்பதையும் உணரவேண்டும். ஆகவே பாரத தேசியத்தை ஒட்டிய - தழுவிய தமிழ்த் தேசியத்தை வற்புறுத்தினான் பாரதி எனலாம். இரண்டையும் ஒன்றுக்கொன்று முரண்