பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

184

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சீனாவுடன் உறவாடுவதால் தனக்குத் தீங்குநேர்வதை - நேர இருப்பதை நினைத்து ஏன் இந்தியாவுடன் இணைந்து நிற்க நினைக்கக் கூடாது? நாடுகள் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு விலகுவதும் பின் ஒன்றுபட்ட கொள்கையால் - பிறர் நெருக்கடியால் இணைவதும் இயற்கைதானே? அம்முறையில் நேற்றுப் பிரிந்த பாகிஸ்தான் நாளை - எதிர்காலத்தில் இந்தியாவுடன் சேராது - சேரக்கூடாது என்று எப்படிக் கூற முடியும்? அன்று சிந்துவையும் கங்கையையும் இணைக்க முடியாதா? இருநாடுகளும் ஒன்று சேர்ந்து கைகோர்த்து நிற்கும் நிலை ஏற்பட்டால் அத்தகைய சிறப்பு வேறு எந்த நாட்டுக்கு வரும். சிந்து நதியில் படகோட்டும் இந்த நோக்கம் அன்று நிறைவேறத்தானே செய்யும்? சிந்து நதிக் காலத்தின் கோளாறால் - ஆட்சியால் பிரிந்தது. காலம் மாறும்போது - இந்தியா, பாகிஸ்தான் இணையும்போது நனவாகும். இன்றைய எண்ணமல்லவா அது? இரு நாடுகளும் இணையும் அத்தகைய நிலை எதிர்காலத்தில் வரும் - வரத்தான் போகிறது.


"என்று தணியும் எங்கள் சுதந்திரதாகம்
என்று மடியும் இந்த அடிமையின் மோகம்"

என்ற பாடலைக் காட்டி சுதந்திர தாகம் தீர்ந்த பிறகு அடிமைத்தளை நீங்கிய பிறகு இந்தப் பாட்டுக்குச் சிறப்புண்டா? இது காலங்கடந்த பாடல்தானே என்கின்றனர்.

அடிமையின் மோகம் தணிவது மட்டும் சுதந்திரமாகுமா? அந்நியர் ஆட்சியிலிருந்து விடுபடுவது மட்டும் சுதந்திரமாகுமா? பொருளியல் விடுதலை - இறப்பினின்று விடுதலை - பிறப்பிலிருந்து விடுதலை பெற வேண்டாமா? சுதந்திரம் என்பது அடிமைத்தளை நீக்கம் மட்டுமன்று, பொருளாதார விடுதலை இறப்பும் பிறப்பும் விடுதலை ஆகிய இவை அனைத்தையும் குறிப்பது; உள்ளடக்கியது. சுதந்திரம்