பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

185


ஒரு பெரிய வட்டம். அந்த வட்டத்திலுள்ள ஒரு புள்ளிதான் அடிமைத்தளை நீக்கம். அந்த ஒரு புள்ளி மட்டும் வட்ட மாகுமா? ஏனைய புள்ளிகள் வேண்டாமா? செல்வமற்ற ஏழைக்கு - உழைத்தும் பயன்பெற முடியாது தவிக்கின்ற உழைப்பாளிகளுக்குப் பொருளாதார விடுதலை வேண்டாமா? இத்தகைய எல்லாவித சிக்கல்களிலிருந்தும் துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறுவதுதான் சுதந்திரம் என்ற கருத்தைப் புலப்படுத்துவதற்காகத்தான் - எல்லாவகை விடுதலையும் பெறுவதுதான் நான் வேண்டும் சுதந்திரம்' என்பதைக் குறிக்கத்தான் பாரதி அழகுற "ஆனந்த சுதந்திரம்” என்று பிறிதோரிடத்தில் குறிப்பிடுகின்றான்.

ஆகவே இந்த நாட்டில் தூய அறிவும் ஆண்மையும் வளரும் வரையில் வலிமையுடையோர் வலிமையற்றோரைச் சுரண்டுவதை விடும் வரையில் சுரண்டப்படுபவர் இல்லையென்று முழங்கும் வரையில் பாரதி குறிப்பிடும் ஆனந்த சுதந்திரம் - முழுச் சுதந்திரம் பெற்றதாகக் கூற முடியுமா? அன்று நாம் பெற்றது சுதந்திரத்தில் வீசம் பங்கே ஆகும். எஞ்சிய முக்காலே மூன்று வீசம் பங்குச் சுதந்திரமும் பெறும் வரையில் இந்தப் பாடல் உயிர்ப்புடன் ஒலித்துக் கொண்டிருக்கும்.

இன்றைய உலகம் விரிந்து பரந்து உள்ளது. நிலத்திலும் வானத்திலும் புதிய புதிய கண்டங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்தியாவில் இல்லாவிட்டாலும் - அமெரிக்காவில் இல்லாவிட்டாலும் - தென்னாப்பிரிக்காவில் இத்தகைய சுதந்திரம் கிட்டாதபோது, இந்தப் பாடல் அவர்களது உள்ளத்தில் எழுச்சியைத் தூண்ட வேண்டாமா? பாரதியார் எட்டயபுர மண்ணில் பிறந்தவரானாலும் அவர் தமிழகத்திற்கு - பாரதத்திற்கு மட்டுமின்றி உலகச் சமுதாயத்துக்கும் சிறந்த கருத்துக்களைத் தரும் அளவுக்குத் தன்னை வளர்த்துக் கொண்டவன். அவன் இந்த நாட்டுக்கு மட்டுமன்றி உலக முழுமைக்கும் சொந்தமானவன். உலகச்-