பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சமுதாயத்தில் எங்கு எங்கு சண்டை சச்சரவுகள் உள்ளனவோ அங்கெல்லாம் அவன் பாடல் பயன்படும். இனவெறி நிறவெறி பிடித்த நாடுகள் சுதந்திரம் பெறாத நாடுகள் இந்த உலகில் இன்னும் எத்தனையோ உள்ளன.

தென்னாப்பிரிக்காவில் நிறவெறி பிடித்தாட்டக் காண்கிறோம். அடிமைத்தளையில் சிக்குண்டு தவிக்கும் நாடுகள் பலவற்றைப் பார்க்கிறோம் இன்றைய உலகத்தில். ஆகவே அங்கெல்லாம் பாரதி போகவேண்டும். அவன் பாடல் ஒலிக்க வேண்டும். உலகப் பிரச்சனைகள் தீரும் வரை - அவை வளர்ந்து கொண்டிருக்கும்வரை இந்தப் பாடல் வேண்டியதுதானே? காலங் கடந்ததாகக் கூற முடியுமா?

ஆதிசிவன் பெற்று விட்டான் என்னை
ஆரியமைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை
மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான்

என்ற பாடலைச் சுட்டிக் காட்டி இது காலங்கடந்த பாடல். சிவபெருமான் தமிழ் மொழியைத் தோற்றுவித்திருக்க முடியுமா? மொழியைத் தனி ஒருவன் தோற்றுவிக்க முடியுமா? இது கருத்துப் பிழையல்லவா? எனவே காலங் கடந்ததல்லவா என்கின்றனர்.

ஆதிசிவன் என்பதை அப்படியே வைத்துக் கொண்டு பார்த்தால் வந்த பிழை அதன் உண்மைப் பொருள் என்ன? சீவன் என்ற சொல் சிவன் என்று திரிந்து வந்துள்ளது. பாடலில் சொற்களை ஏற்ற இடங்களில் - இன்றியமையாத இடங்களில் நீட்டியும் குறைத்தும், திரித்தும் வழங்குவது என்பது இலக்கணமும் ஏற்றுக்கொண்ட நெறி - மரபு ஆகும். வலித்தல் மெலித்தல் நீட்டல் குறுக்கல் விரித்தல் தொகுத்தலும் வரும் செய்யுளுள் வேண்டும் என்பது இலக்கணம். எனவே சீவன் என்பது பாடலின் சந்த ஒட்டம் தடைப்படாதிருப்பதற்காகச் சிவன் என்று வந்துள்ளது. சீவன்