பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
9


கவிஞன் பாரதி என்பதை ஐயமும் திரிபுமின்றி நிலை நாட்டுகின்றார்.

பாவேந்தர், கண்ணதாசன், பட்டுக்கோட்டைக் கவிதைகளை எடுத்துக் காட்டிப் பாரதிக்குப் பின் தமிழ்க் கவிதை தழைத்து வளர்ந்திருப்பதை உறுதிப்படுத்துகின்றார். பாரதியின் நாடித்துடிப்பைக் கண்டறிந்த மேதையாக அடிகளார் காட்சிதருகின்றார். ஜீவா, எஸ்.இராமகிருஷ்ணன், ஆர்.கே.கண்ணன் போல் பாரதிக்குப் புதிய புதிய விளக்கங்கள் காணும் வித்தகர் வரிசையில் பாரதிச் சித்தராக அடிகளார் திகழ்கின்றார். அழகியலை விட அறவியலும், அறவியலை விட அறிவியலும் அடிகளார் திருவுள்ளத்தை ஆட்கொண்டிருப்பதை பாரதியைக் குறித்த கட்டுரைகள் புலப்படுத்துகின்றன.

தொடர்ந்து பாரதிதாசனின் கவிதை உலகத்தை மிக நீண்ட ஒரு கட்டுரையால் அளந்து காட்டுகின்றார். சாதி எதிர்ப்பும், கடவுள் மறுப்பும், பெண் விடுதலையும், தேசியமும், உழைப்பின் மகத்துவமும், உலகளாவிய பார்வையும், கொழிக்கும் தமிழ் உணர்வும் பாரதிதாசனின் உணர்வுக் கோலங்களாக அடிகளார் வரைந்து காட்டுகின்றார்.

அண்ணாவின் படைப்புக்களையும், பட்டுக்கோட்டையின் பாடல்களையும், சமுதாய மறுமலர்ச்சிக் கவிதைகளையும் சமுதாயக் கண்ணோட்டத்தில் ஆராய்ந்து எழுதியுள்ள கட்டுரைகளில் மீண்டும் அடிகளாரின் பொதுமை உள்ளம் பொன்னாய் மின்னுகின்றது.

இலக்கியம் சமுதாயத்தை விளக்குவதோடு சமுதாயத்தை மாற்றியமைக்கும் ஆயுதமாகவும் திகழவேண்டும் என்பது அடிகளாரின் இலக்கியக் கோட்பாடு. புதிய மாற்றங்களின் காற்றாக இலக்கியம் துலங்க வேண்டும் என்ற மாண்புறு சிந்தனை, பக்கத்துக்குப் பக்கம் இந்நூலில் முத்திரை பதித்துள்ளது.

கு.இ.v1.2.