பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

197


வேண்டும்; மலர்ச்சி பெற வேண்டும் என்று பாரதி விரும்பினார். இதுதான் மறுமலர்ச்சி.

'தேசீயம்' என்ற சொல்லே ஆழமான - அகலமான பொருள் பொதிந்த ஒரு வார்த்தை ஓரூர் - ஒரு நாடு என்ற நிலையின்றி தானுண்டு, தன் வீடுண்டு என்றிருந்த நிலையை மாற்றி, நீ பெரிதல்ல - உமது வீடும் பெரிதல்ல; இந்த ஊரும் நாடுந்தான் உயர்ந்தன - பெரியன என்று உணர்த்தினார். அதுதான் தேசீயம்.

பாரதியாருக்கு முன்னே நமக்கு ஜில்லா உணர்ச்சி, ஜாதி உணர்ச்சி இப்படித்தானிருந்தது. பாரதி இந்நிலையை மாற்றி, இந்தியத் தேசியம்கூட அல்ல உலக தேசியத்தையே பாடியிருக்கிறார். மனிதன் வாழும் உரிமை பெற்றவன்; ஒருவரைச் சுரண்டாமல் அட்டைபோல உறிஞ்சாமல் அவன் மனிதனாகவே வாழ வேண்டும் என்றார் அவர். தேசியம் என்பதிலே, மறுமலர்ச்சியும், இறைமைத் தன்மையும் விரவிக் கலந்து கிடக்கின்றன.

நமது நாட்டில் இன்று இறைமைத் தன்மையின் பேரால் ஆடுகின்ற பேயாட்டம் மிகமிகக் கொடியதாக இருக்கின்றது. இங்கு இறைமைத் தோற்றமும் காட்சியும் இருக்கிறதே யொழிய இறையின் செயல் வாழ்வில் ஊடாடி வளரவில்லை.

இங்கு பழனி மலையிலே இறைவனைக் கோவணாண்டியாகத் துறவு கோலத்தில் காண்கின்றோம். இங்கு வருகிறோம். வாழ்த்துகிறோமே, வணங்குகிறோமே, அந்தத் துறவுக் கோலத்திலிருந்து நாம்பெற வேண்டிய எளிய வாழ்க்கையையும், தன்னல மின்மையையும் நமது வாழ்க்கையில் கலந்திருக்கின்றனவா? இறையின் செயல், தோற்றம் நமது வாழ்வில் கலந்திருக்கிறது என்றால், அந்த எளிய தோற்றமும், தன்னலமில்லாப் பண்பும் அல்லவா நமது வாழ்வில் கலந்திருக்க வேண்டும்.