பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

199


உள்ளமும் வளராது. நீண்ட நெடுநாட்களுக்குப் புகழோடு வாழவும் முடியாது. மனிதன் வளர்கிறான் என்றால் அவன் சிந்திக்கிறான் என்று பொருள்.

தாயைவிடப் பிள்ளை சிறந்ததாக இருப்பது தாய்க்குப் பெருமை - தந்தையின் சிந்தனையைவிட மகனின் சிந்தனை சிறந்ததாக இருப்பது தந்தைக்குப் பெருமை. இந்த வளர்ச்சியில் தவறேதுமில்லை. இதைத்தான்,

“தம்மின் தம் மக்கள் அறிவுடைமை-மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது"

என்றார் வள்ளுவப் பெருந்தகை. வள்ளுவரும், கம்பரும் இளங்கோவும் இலக்கிய உலகில் பாரதிக்குத் தந்தையராக விளங்குகின்றனர். எனினும் அவர்களைக் காட்டிலும் சில இடங்களில் பாரதி மேலோங்கி நின்றார் என்பதை நாம் ஏற்கத் தயங்கக் கூடாது. ஆங்கில இலக்கிய மேதை ஜார்ஜ் பெர்னாட்ஷா உலக நாடகப் பேராசிரியரான ஷேக்ஸ்பியரையும்விட, தான் வளர்ந்திருப்பதாக ஒரு சமயம் தன்னைப் புகழ்ந்து எழுதியிருந்தார். இதையொட்டி அவருக்கு எதிர்ப்புத்தோன்றியது. அதற்குப் பெர்னாட்ஷா, ஷேக்ஸ்பியர் தரை மட்டத்தில் நின்று கொண்டார் - நான் அவர் தோள்மீது ஏறி நின்று கொண்டு தொடுகிறேன் என்று அழகாக - சுருக்கமாக ஆனால் தெளிவாகப் பதில் கூறினார். முதல் சால் உழும்போது ஏற்படுகின்ற புழுதியைவிட இரண்டாவது சால் உழும்போதுதானே அதிகப் புழுதி ஏற்படுகிறது.

பாரதி, பண்டை கருத்துவழி நின்றே புதுமையைக் கண்டார். பழமை, காலத்திற்கேற்ப - கருத்து வளர்ச்சிக்கேற்ப மாறி வளர்ந்துதான் புதுமையாகிறது. ஒன்று பண்டைக் காலத்தில் தோன்றியது என்பதாலேயே அது பழமையாகி விடாது. இன்று முளைத்தது என்பதாலேயே ஒன்று புதுமையாகி விடாது. பழமைக்கும் புதுமைக்கும் காலம்