பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அளவுகோல் அல்ல. ஒரு கருத்து காலத்தால் மிக மூத்ததாக, பழமையானதாக இருந்தாலும் இன்றைய வாழ்க்கைக்கு உதவுவதாக - ஏற்புடையதாக இருக்குமானால் அதைப் புதுமையானதாகவே எண்ணிப் போற்ற வேண்டும்; ஒரு கருத்து நேற்று முளைத்ததாக இருந்தாலும், இன்றே தோன்றியதாக இருந்தாலும் வாழ்வியலுக்கு ஒத்ததாக - உறுதி பயப்பதாக - நலன் விளைவிப்பதாக இல்லையானால் அதைப் பழையது என்று கருதி ஒதுக்கித் தள்ளத்தான் வேண்டும்.

மேலை நாட்டினர் நம்மைக் காட்டிலும் பலதுறையிலும் முன்னேறியிருக்கிறார்கள் - வளர்ந்திருக்கிறார்கள் - போற்றும் புதுமை பல கண்டிருக்கிறார்கள். ஆம். அவர்கள் புதுமையைப் போற்றுகிறார்கள். எனினும் பழமையைத் துற்றிக் கொண்டே காலங் கழிக்கவில்லை. புதுமை கண்டு பிடிக்க முயல்கிறார்கள் - புதுமை வளர ஆக்கங் கொடுக்கிறார்கள் - புதுமை புதுமையெனப் புதுமை வேட்கை கொண்டு முன்னேறுகிறார்கள். இங்கோ, புதுமையை ஏற்பவர்கள், புதுமை வேட்கைக் கொண்டவர்கள். புதுமையைப் படைப்பதில் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதில்லை. பழமையை இழித்தும் பழித்தும் பேசிக் கொண்டே காலங் கடத்துகிறார்கள். பாரதியார் பழமையைப் போற்றினார். பழமையில் நின்று கொண்டு புதுமையைப் படைத்தார். இன்னும் சொல்லப்போனால், பாரதி பழமைக்கும் புதுமைக்கும் ஓர் இணைப்புப் பாலத்தை உருவாக்கினார் என்றே கூறலாம். சாளரத்தின் வழியாகப் புதிய காற்று வந்தால் அதனால் தீமை விளைவதில்லை, சமுதாயத்தில் சுயநலத்தின் காரணமாக - தங்கள் சுகபோக வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படும் என்ற அச்சத்தால் சிலருக்கு இந்தப் புதிய காற்று பிடிப்பதில்லை. அது அவர்கள் குற்றமேயொழிய காற்றின் குற்றமல்ல. தேவையற்ற பழையன