பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

201


கழிதலும், பயன் விளைவிக்கும் புதியன புகுதலும் இயல்புதான். இதனையே,


'பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே'

என்று நன்னூல் பாடல் ஒன்று பேசுகிறது.

பொதுவாகப் பழைமையை விட்டுவிட்ட புதுமையும் வாழாது. புதுமையைத் தன்னுள் ஏற்றுக்கொள்ளாத பழமையும் வாழாது. அன்ன சத்திரம் ஆயிரம் கட்டல்; ஆலயம் பதினாயிரம் நாட்டல், முதலியனவற்றைவிட 'ஏழை ஒருவனுக்கு எழுத்தறிவித்தல் சிறந்தது' என்றார் பாரதி; இதனால் பாரதி கோயில் வேண்டாம் என்று சொல்லி விட்டார் என்று கூறிவிட முடியுமா? கோயில் இருந்து, காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கும் பக்தர்கள் இல்லையானால் கோயிலால் என்ன பயன்? கோயில் வேண்டும். தொழுது தூமலர் தூவி அழுது ஆற்றும் அடியவர்களும் வேண்டும்.

இங்கு உழைக்காமல் - பரம்பரைச் சொத்தைக் கொண்டு உல்லாசமாக வாழ்பவனுக்குத்தான் சமுதாயத்தில் பாராட்டும் மதிப்பும் இருந்தது. இந்த இழி நிலையை ஒழிக்க வேண்டும் என்று பாரதி விரும்பினார். எனவே,

'உழவுக்கும் தொழிலுக்கும்
வந்தனை செய்வோம்-வீணில்
உண்டுகளித் திருப்போரை
நிந்தனை செய்வோம்'

என்று பாடினார். உழைத்துச் சொத்து சேர்ப்பவனையே பாரதி பாராட்டுகிறார். உழைக்காமல் உண்டு, உறங்கி உல்லாச வாழ்வு வாழ்கிறவர்களை நிந்தனை செய்வோம் என்று பேசினார்.