பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

204

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அமையாதிருக்குமானால் அவன் தலைமை நல்ல பயனை விளைவிக்காது; அவனது தலைமையும் மக்கள் சக்தியால் மாற்றப்பட்டு விடும். எத்தனையோ பேரரசுகள் மறைந்தொழிந்தமையே இந்த உண்மையை நன்கு எடுத்துக் காட்டும். மகாகவி பாரதியின் இந்தத் தன்னல மறுப்பு உபதேசம் அரசியல் தலைவர்களுக்கு மட்டுமல்ல, சமுதாயம், சமயம், அறநிலையங்கள் முதலியவற்றின் தலைவர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக அமைகின்றது. துறவியினுடைய இலட்சணம் இவ்வுலகப் பொருள்களிடத்துப் பற்றின்றி வாழ்வதேயாம். ஆனால் தன்னைச் சார்ந்துள்ள - தன் நாட்டிலுள்ள மக்களை மறத்தல் அல்ல. அறிவும், ஒழுக்கமும், அன்பும், நம்பிக்கையும் கொண்டு மக்கள் நலம்பெற வாழ வழிகாட்டிப் பணி செய்வதையே கடமையெனக் கொண்டவர் துறவிகள் என்பது கதே என்ற தத்துவ ஞானியின் அறிவுரை. "ஞானிகள் முயல வேண்டுவது உலகத்தை வெறுக்கவன்று; உலகத்தை அறியவேயாகும்" என்பது அவர் மொழி. ஈண்டு உலகம் என்பது மக்களையே குறிக்கின்றது. உலக மக்களின் நிலையறிந்து, தேவையறிந்து அவர்கள் வளர வேண்டுவன செய்யக் கடமைபட்டிருக்கிறான் உண்மையான துறவி. அதையே பாரதி "பிறர்க்கன்றி தனக்குழையாத் துறவியாவேன்" என்று சொல்லி விளக்குகின்றார். இத்தகைய துறவிகள் இந்த நாட்டிலே பெருகுவார்களானால் இம்மண்ணுலகமே விண்ணுலகமாய் மாறிவிடும்.

சில இடங்களில் பாரதியார் ஆண்டவனை நோக்கிச் செய்யும் தமது பிரார்த்தனையின் மூலம் தலைவர்களுக்குச் சிறந்த வழியைப் புகட்டுகிறார். பாரதியர் தமது சுய சரிதையைப் பாடி முடித்தபின்பு இறுதியாகப் பரம் பொருளிடம் ஒருசில வேண்டுகிறார். அவற்றைப் பார்ப்போம்.