பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பாரதியின் கனவுகள்

211


செய்வது, வாழ்வை அருளும் என்று எவ்வளவு அருமையாகக் குறிப்பிடுகின்றார் பார்த்தீர்களா? இங்ஙனம் தலைவனுக்கு வேண்டிய பிற குணங்களுக்கெல்லாம் மணிமுடியாகக் கடவுட்பற்றைக் கூறி நமக்கெல்லாம் நல்ல வழி காட்டுகிறார் வையத் தலைவர் மகா கவி பாரதி.

அன்றாட வாழ்வில் அச்சமின்மை

அச்சமே கீழ்களது ஆசாரம். அன்றாட வாழ்வில் அஞ்சி அஞ்சிச் சாகின்றவர் பலர். அச்சம் உடையவர்கள், வாழ்க்கையில் முன்னேற மாட்டார்கள். பயனும் இல்லை. அச்சத்தின் காரணமாகவே வாழ்க்கையை, செல்வத்தை, நட்பை இழந்து அல்லற்படுகிறவர்கள் பலர்.

அச்சம் ஆட்கொள்ளும் வாயில்கள் என்னென்ன? சுறுசுறுப்பாக இல்லாமல் சோம்பிக் கிடத்தல், இடர்ப்பாடுகளைச் சந்திக்க அஞ்சுதல், விமர்சனத்திற்குக் கூச்சப்படுதல், மரணத்திற்குப் பயப்படுதல், நாளை என்ன நடக்குமோ என்று ஐயுறுதல், நண்பர்களின் நடத்தையில் ஐயுறுதல் ஆகியன குறிப்பிடத்தக்க வாயில்கள்!

யாதொரு பணியுமின்றி வறிதே சோம்பிக் கிடப்பவர்களை அச்சம் ஆட்கொள்ளும். அச்சப்படுவோரின் வாழ்க்கை முரண்பட்ட நிலையினது. அவர்கள் செயல் செய்ய அச்சப்படுவர்; ஆனால், சுகமாக வாழவேண்டும் என்று ஆசைப்படுவர்.

இந்த முரண்பட்ட நிலையில் செல்வம் வருவதற்குரிய வாயிலாகிய உழைப்பாற்றல் வற்றிப்போகிறது. அதனால், அடுத்த வேளை சோறு கிடைக்குமா? பிழைப்பு நடக்குமா? என்ற அச்சம் ஆட்கொண்டு விடுகிறது. சோம்பலின் காரணமாகப் பிறக்கும் அச்சம், வாழ்க்கை முழுவதையும் கெடுக்கும். இதனை, அறவே தவிர்த்திட வேண்டும்.