பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஏற்றுக் கொள்க! எப்போதும் அமைதியைப் பேணுக! காண்க!

உள்ளத்தில் அச்சம் மெள்ள உருவாகிறதைக் கூர்ந்து கவனித்திடுக! உடன் அதனை இயற்கையின் எச்சரிக்கையாகவே ஏற்றுக்கொள்க! உடனடியாக எழுச்சியுடன் - சுறுசுறுப்புடன் பணியில் ஈடுபடுக!

அச்சம் எந்தக் காரியத்தைச் செய்யா தொழிவதால் வரும் என்று தோன்றுகிறதோ அந்தக் காரியத்தை உடனடியாகச் செய்யத் தொடங்கி முடித்து விடுக! அச்சம் தலைக்காட்டாது. அச்சத்தை வென்று வாழ்கிறவர்களே மனிதர்கள்! தொடக்கத்தில் அச்சமில்லாத நிலையைப் பாவித்துக் கொள்க. காலப்போக்கில் அந்தப் பாவனையே அச்சமின்மையைத் தந்து மகிழ்வூட்டும்!

“அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை" என்ற வரிகளை அன்றாடம் வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகி அச்சமின்றி வாழ்வோமாக!

உயிர்களிடம் அன்பு

அன்பு - ஆற்றல் நிறைந்த ஒரு சொல்! அன்பு - மண்ணையும் விண்ணையும் இணைக்கும் ஆற்றல் மிக்க உணர்வு! அன்பு எல்லைகளைக் கடந்தது! அன்பு, ஆக்கத்தினை நல்கும்! இன்பத்தினை வழங்கும்!

மனிதர்கள் தனித்தனியே பிறந்திருக்கின்றனர். காலமும் தூரமும் அவர்களைப் பிரித்து வைத்துள்ளது. இப்பிரிவினைகள் அன்பை வளர்ப்பதற்காகப் படைக்கப் பெற்ற பிரிவினைகளே தவிர வேறில்லை.

அன்றாட வாழ்வில் உயிரியக்கம் இருப்பதற்கே அடையாளம், அன்புதான்! "அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு" என்று வள்ளுவம் கூறும்! ஆம்! உயிர் வாழ்க்கை இயங்க எத்தனை