பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 6.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தேவையான - சுவையான காய்களை, கனிகளை நமக்குக் கணக்கில்லாமல் வழங்கி வாழ்வளிக்கின்றன!

அடுத்து, பாலினைப் பொழிந்து நம்மை வளர்க்கும் பசுவினிடத்து அன்பைக் காட்டுங்கள்! நம் குடும்பத்தில் வாழும் அனைவரோடும் அன்பாகப் பழகுங்கள். யார் மாட்டும் ஐயங்கொள்ளாதீர்கள்! அதட்டாதீர்கள்! சண்டை போட்டுக் கொள்ளாதீர்கள்!

நம்மைச் சுற்றியிருப்பவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றும் சேவகர்களாக வாழ்வோமாக! வையம் உண்ண உண்போமாக! வையம் உடுத்த உடுப்போமாக!

அன்பு, மேம்போக்காக இருத்தல் கூடாது. ஆழ்ந்த அன்பாக இருத்தல் வேண்டும். யார் மாட்டும் அன்பினாலாய பணிவு வேண்டும். அன்பு, பூரணத்துவம் அடைய வேண்டுமானால் முற்றாகத் தற்சார்பு நீங்க வேண்டும்! அத்தகைய அன்பே கண்ணப்பர் பொழிந்த அன்பு! இயேசு பொழிந்த அன்பு! புத்தர் பொழிந்த அன்பு! இத்தகைய அன்புக்கு மாற்றே இல்லை!

அன்றாட வாழ்க்கையில் நூற்றுக்கணக்கானவர்களைச் சந்திக்கின்றோம். நாம் சந்திக்கின்ற மனிதர்களில் நல்லவர்களும் இருப்பார்கள் அல்லாதவர்களும் இருப்பார்கள்! ஆயினும் நம்முடைய அன்பு குறையக்கூடாது! அல்லது மாறக் கூடாது!

நாம் நன்மைக்கு ஈடாக அன்பைக் காட்டுவதில் என்ன பெருமை இருக்கிறது? தீமைக்கு மாற்றாக அன்பைக் காட்டுவதுதான் உண்மையான அன்பு!

அன்பு காட்டுதல் அல்லது அன்பு செய்தல் என்பது பயிற்சியால் வருவது. இந்தப் பயிற்சி ஓயாது காட்டப் பெறுவதால் வளரும். அன்பு தோன்றுவதற்கு முதற்களன் எல்லோரும் ஒரே கடவுளின் அன்புக்குரிய ஒரே